தவெகவை ஆரம்பித்த விஜய் விக்கிரவாண்டி மாநாட்டில் தனது 45 நிமிட பேச்சில் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார். குறிப்பாக ஆளுகின்ற அரசுகள் தான் தனது முக்கிய எதிரிகள் என்பதை சொன்னார். இதனால் விஜய் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் விஜய் அதன்பின்னர் சைலண்ட் மோடுக்கு போய்விட்டார். அவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகளும் அப்படியே இருந்ததால் தொண்டர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. விஜய் யாரையும் சந்திப்பதில்லை அவ்வப்போது அறிக்கை மட்டுமே வரும் என்று செயல்பட்டதால் ’பனையூர் அரசியல்’ என தவெக செயல்பாடு கிண்டலடிக்கப்பட்டது. இதை மாற்றும் முயற்சியில் விஜய்யும் ஈடுபடவில்லை, புஸ்ஸி ஆனந்தும் ஈடுபடவில்லை. இதன் விளைவு சமூக வலைதளங்களில் கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் கட்சி ஆளானது. இது தொண்டர்களுக்கு சோர்வை ஏற்படுத்தியது. மறுபுறம் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமியும் தன் பங்குக்கு முட்டி மோதியும் புஸ்ஸி ஆனந்தை மீறி கட்சியை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாததால் அவர் கடுப்பானார்.

இந்நிலையில் லட்டு மாதிரி கையில் கிடைத்த அண்ணா யூனிவர்சிட்டி விவகாரத்தில் தவெக ஆளுநரிடம் மனு என்பதோடு சுருங்கியது. சட்ட போராட்டம் நடத்த வழக்கறிஞர் அணி இருந்தும், மக்கள் போராட்டம் நடத்த கட்சி அணிகள் இருந்தும், நிர்வாகிகள் செயலற்று இருந்தனர். அதிகபட்சமாக விஜய் ஒரு கடிதத்தை எழுதினார். அதை தன்னெழுச்சியாக மகளிரணி தொண்டர்கள் விநியோகித்து கைதானபோது அதிலும் ரியாக்ஷன் காட்டாமல் கட்சித்தலைமை இருந்தது தொண்டர்களுக்கு சோர்வை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைதேர்தல்...வாய்ப்பை தவறவிட்ட அதிமுக...
தொண்டர்களை பார்க்க வந்த புஸ்ஸி ஆனந்த் கைதானபோதும் அவர் பேட்டி எதுவும் கொடுக்காமல் நழுவி சென்றது வேகமாக இருந்த தவெக தொண்டர்களை சோர்வாக்கியது. அண்ணா யூனிவர்சிட்டி மாணவி விவகாரத்தில் கட்சி வேகமாக செயல்பட்டிருந்தால் பெண்கள், இளம் தலைமுறையினர் இடையே ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்கும், அண்ணாமலையிடம் இருந்த வேகத்தில் 10% கூட நம் தலைவர்களிடம் இல்லையே என கட்சித்தொண்டர்கள், இரண்டாம் கட்ட நிர்வாகிகள் சோர்ந்திருந்த வேளையில்தான் ஜான் ஆரோக்கியசாமியின் ஆடியோ லீக்கானது.

ஆடியோ தனது இல்லை என்று ஆரோக்கியசாமி மறுக்கவில்லை. ஆடியோவில் இருந்த விஷயங்கள் நூற்றுக்கு நூறு சரியானது என்று தாவெக நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் விமர்சகர்கள் கருதிய நிலையில் கட்சி நிலையை பற்றி மற்றவர்களிடம் கேட்டறிந்த விஜய் புஸ்ஸி ஆனந்தை கண்டித்ததாகவும், மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனத்தில் பணம் விளையாடுவது குறித்து கீழ் அணியினர் புகாரை கேட்டுக்கொண்டதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க முடிஎடுத்துள்ளதாகவும் கட்சிக்குள் பேச்சு அடிபடுகிறது.
அதே நேரம் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி கட்சி உள் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்தோடு சேர்ந்து செயல்பட்டதும், பின்னர் புஸ்ஸி ஆனந்தோடு முரண்பட்டவுடன் ஆடியோ வெளியிட்டதாகவும் விஜய் காதுக்கு போனதால் டென்ஷனான விஜய் ஜான் ஆரோக்கியசாமியை சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

கட்சியில் வேகம் கூட்டவும், அடுத்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தி ஆளுகின்ற அரசுக்கு பனையூர் அரசியல் செய்பவரல்ல தான் என்பதை கட்டவும் களத்தில் நேரடியாக இறங்க விஜய் முடிவெடுத்துள்ளாராம். மக்களை நோக்கிய பயணத்தின் முதல்படியாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டு மீடியா கவனத்தை கவர்ந்துள்ள மூன்று முக்கிய இடங்களை தேர்வு செய்து அதில் முதலில் ஒரு இடத்தில் மக்களை சந்திப்பது என முடிவு செய்துள்ளாராம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க பயிர்வளம் மிக்க செழிப்பான விவசாய நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து அங்குள்ள மக்கள் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ஏற்கனவே அவர்களுக்கு ஆதரவாக விஜய் அறிக்கை விட்டுள்ளார்.பரந்தூர்- ஏகனாபுரம்- புதிய விமானநிலைய நிலம் கையகப்படுத்துதல் பிரச்சினையை கையிலெடுத்து அம்மக்களை நேரடியாக சந்திக்கலாம் என அதற்கு அனுமதி கேட்டுள்ளார்.

அடுத்து மதுரை- அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் பிரச்சினை பெரிதாக வெடித்துள்ளது. திமுகவின் அலட்சியம், ஆதரவாக நிலைப்பாடு எடுத்ததால் தான் ஏலம் விடுவது வரை போயுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக போராடி வரும் மக்களை சந்திக்கலாம் எனவும் திட்டமிட்டுள்ளார்.
மூன்றாவதாக கன்னியாகுமரி - IREL மணவாளகுறிச்சி நில எடுப்புக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராடி வருகிறார்கள், அதை தடுக்கும் கோரிக்கைக்காக போராடும் மக்களை சந்திக்கலாம் என்கிற முடிவும் உள்ளது. இதில் எதற்கு பர்மிஷன் கிடைத்தாலும் அதை முதலில் செய்து மக்களை நேரடியாக சந்திக்கலாம் என்கிற முடிவை விஜய் எடுத்துள்ளார். இது தவிர சிப்காட் விவகாரத்தில் போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்து அவப்பெயரை தேடிய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் விவசாய மக்களையும் சந்திக்கலாம் என்கிற முடுவுடன் விஜய் இருக்கிறாராம்.

முதற்கட்டமாக பரந்தூர் செல்ல அனுமதி கேட்டுள்ளார், போலீஸார் அனுமதி மறுக்கும்பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மற்ற இடங்களுக்கு செல்லும் நடவடிக்கையில் இறங்குவார் என தெரிகிறது. புஸ்ஸி ஆனந்த் மன்றம் நடத்த மட்டுமே லாயக்கு என பலரும் சொன்னதையும் விஜய் பரிசீலித்துவருவதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் விஜய்யின் அவுட்டோர் அரசியல் ஆளுகின்ற அரசுக்கு தலைவலியையும், தவெக தொண்டர்களுக்கு உற்சாகத்தையும் தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதையும் படிங்க: நினைச்சத பேச நீட் தேர்வு ஒண்ணும் உங்க சினிமா பஞ்ச் டயலாக் இல்ல...! விஜய் எதிர்ப்பை பஞ்சராக்கிய திமுக அமைச்சர்!