சென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக இரு வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட வயதான தம்பதியர் உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை போர் நினைவு சின்னம் அருகே உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கோட்டை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக 68 வயதுடைய சாந்தி என்பவரும் அவரின் கணவர் எலி என்ற பெருமாள் (70) இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யபட்டது. இதே போன்று கடந்த 2022 ஆம் ஜூலை மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறை சோதனை செய்த போது கோட்டூர் சேர்ந்த 28 வயதுடைய அபிஷேக் என்ற வாலிபர் கைது செய்யபட்டார்.
இதையும் படிங்க: ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர்.. 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!
அவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்தபட்ட விசாரணையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த கஞ்சாவை ஆதம்பாக்கம் சேர்ந்த அஸ்வின் என்பவரிடம் இருந்து வாங்கி சிறு பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வதாக தெரிவித்தார். இதனையடுத்து அபிஷேக், அஸ்வின் இருவரையும் காவல்துறை கைது செய்தனர்.

இவர்களுக்கு எதிரான இரண்டு வழக்குகளும் சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி, காவல்துறையின் தரப்பில் கூறிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபடவில்லை எனவே குற்றச்சாட்டு பலன்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: டாக்டர்கள் செய்யக்கூடிய செயலா இது? மருத்துவக் கல்லூரி விடுதியில் கஞ்சா.. பயிற்சி மருத்துவர்கள் மூவர் கைது!