×
 

அதிகாலையில் நிகழ்ந்த கொடூர விபத்து.. 5 பேர் பலி.. பேருந்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்..!

குளித்தலை அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் டிரைவர் உட்பட 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் -  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கோர விபத்து ஒன்று நேர்ந்தது. திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும் கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் பஸ்ஸின் அடியில் கார் சிக்கிக் கொண்டதால் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் உட்பட ஐந்து பெரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு குளித்தலை போலீசார் விரைந்தள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது கார் பஸ்ஸின் அடியில் சிக்கி உடல்களை மீட்க முடியாத நிலையில் இருந்துள்ளது. இதன் காரணமாக முசிறி தீயணைப்பு துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.  தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடினர். பேருந்தின் அடியில் கார் சிக்கி இருந்தது. காரின் இடிபாடுகள் இடையே 5 பேரின் உடலும் நசுங்கிய நிலையில் சிக்கி இருந்தன. இந்நிலையில் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் சிக்கிய ஐந்து பேரின் உடல்களையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

இதையும் படிங்க: பட்டாசு குடோனில் திடீர் தீ விபத்து.. தரைமட்டமான பட்டாசு ஆலை.. 3 பெண்கள் பலி.. நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

ஐந்து பேரின் உடல்களை கைப்பற்றிய குளித்தலை போலீசார் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். கார் பதிவு எண்ணைக் கொண்டு இறந்தவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கோவை மாவட்டம் குனியமுத்தூரை சேர்ந்த செல்வராஜ் (வயது 52), தனது மனைவி கலையரசி மகள் அகல்யா மகன் அருண் ஆகியோருடன் ஒரத்தநாடு அருகே கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோவிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றது தெரிந்தது. காரை ஓட்டி வந்த டிரைவர் ஈரோடு மாவட்டம் வில்லரசன்பட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்பதும் தெரிந்தது. இந்த விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், டிரைவர் உட்பட 5 பேரும் உயிரிழந்தாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. 

இந்நிலையில் விபத்து குறித்து தகவலறிந்து மாவட்ட ஆட்சியர், டி.எஸ்.பி, எஸ்.பி, வட்டாட்சியர், குளித்தலை காவல் ஆய்வாளர், வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். விபத்து காரணமாக கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின் விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. குளித்தலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தெலுங்கானாவில் கோர விபத்து... இடிந்து விழுந்த சுரங்கப்பாதை...! சிக்கிய தொழிலாளர்களின் கதி என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share