திருச்செந்தூர் முருகன் கோயிலில் மிரட்டும் கடல் அரிப்பு.. ஆய்வுக்காக படையெடுத்த விஞ்ஞானிகள்
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பு காரணமாக பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன. இந்தக் கடல் அரிப்பை தேசிய கடலோர ஆராய்ச்சி மைய (என்சிசிஆர்) விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்
திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் கடந்த 2 மாதங்களாகக் கடுமையான கடல் அரிப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கோயில் முகப்பில் பக்தர்கள் புனித நீராடும் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டதால் 20 அடி நீளத்துக்கும், 8 அடி ஆழத்துக்கும் பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. கடல் அரிப்பால் திருச்செந்தூர் கோயில் கடற்கரை வேகமாக சுருங்கி வருகிறது. இதனால் பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே கடல் அரிப்பிலிருந்து கோயில் கடற்கரையைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
எனவே தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஏற்கனவே ஆய்வு செய்தனர். இதனையடுத்து திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஏற்படும் கடல் அரிப்பை தடுப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு சென்னை ஐஐடிக்கும், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்துக்கும் (என்சிசிஆர்) தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இதன்படி ஐஐடி குழுவினர் திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் விரிவாக ஆய்வு மேற்கொண்டனர். கடல் அரிப்புக்கான காரணம், கடல் அரிப்பின் அளவு குறித்தெல்லாம் அக்குழுவினர் ஆய்வு நடத்தினர். இதன் தொடர்ச்சியாக தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமநாதன் தலைமையில் 9 விஞ்ஞானிகள் கொண்ட குழுவினர் திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். கோயில் கடற்கரை பகுதி முழுவதையும் நேரில் பார்வையிட்டு அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தினர். இந்நிலையில் இன்று ட்ரோன் மூலம் விரிவான் ஆய்வை விஞ்ஞானிகள் குழு நடத்தினர்.
பின்னர் விஞ்ஞானி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வரும் 25-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறு உள்ள ஆலோசனை கூட்டத்தில் இங்கு சேகரித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையைட் சமர்பிப்போம். தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடலோர மேலாண்மை திட்டங்கள் தொடர்பாக வரைவு தயார் செய்து கொடுக்கும் பணியை எங்கள் மையம் செய்து வருகிறது. வெள்ளம், கடல் அரிப்பு போன்றவைகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க என்ன வழி என்பது தொடர்பான அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து மேலாண்மை திட்டங்களை நாங்கள் தயாரித்து கொடுக்கிறோம்.
திருச்செந்தூர் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்புக்கு பருவநிலை மாற்றம், கடல் அலைகளின் தாக்கம் அதிகரிப்பு, புயல் அடிக்கடி ஏற்படுதல், கடற்கரை பகுதிகளில் தூண்டில் வளைவு அமைத்தல் போன்றவை காரணமாக இருக்கலாம். இந்த ஆய்வில் அறிவியல் ரீதியிலாக கிடைக்கும் தகவல்களை அரசிடம் சமர்பிப்போம். அதன் அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்." என்று ராமநாதன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோமியத்தை கிண்டல் செய்பவர்களெல்லாம்..! ஐஐடி இயக்குநருக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஸ்ரீதர் வேம்பு
இதையும் படிங்க: மாட்டிறைச்சி சாப்பிடுவீங்க, கோமியத்தை ஏன் குடிக்கக்கூடாதா? தமிழிசை கேள்வி