எஸ்.பி. வேலுமணி மீது ஆக்ஷன் எடுக்க துடியாய் துடிக்கும் எடப்பாடி?... அமித் ஷாவால் அதிமுகவில் கிளம்பிய பூதம்...!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருவதால், எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சிக்குள் கலகக்குரல்கள் எழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருவதால், எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சிக்குள் கலகக்குரல்கள் எழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்தநாள் அமைதியாக கடந்து போயிருக்கிறது ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்குள் அதிமுக பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என பாஜக விதித்திருந்த கெடுவைத் தாண்டி ஜெயலலிதாவின் பிறந்தநாள் அமைதியாகவே சென்றது. முன்னதாக ஜெயலலிதா ஒரு ஊழல்வாதி ஊழல் வழக்கிற்காக சிறை சென்ற முதலமைச்சர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், இந்த முறை ஜெயலலிதா பிறந்தநாளில் அவரை சிறந்த தேசியவாதி, மக்களுக்காக பாடுபட்ட தலைவர் என்றெல்லாம் புக்ழந்திருந்தார். அண்ணாமலை இப்படி அந்தர் பல்டி என அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது பல ருசிகரமான தகவல்கள் கிடைத்தன.
இதையும் படிங்க: கோவையில் களமிறங்கும் சத்யராஜ் மகள்..! எஸ்.பி வேலுமணிக்கு செக்..! திமுக ஜரூர்
பாஜகவிடம் மடங்கிய எடப்பாடி:
சமீப காலமாக எடப்பாடி பாஜாகவை எதிர்த்து எதுவும் பேசுவதில்லை பாஜக கொண்டுவரும் மும்மொழி திட்டத்தையும் பெயரளவில் எதிர்த்துவிட்டு வாயை மூடிக்கொண்டுவிட்டார். அவருக்கு ஏகப்பட்ட குடைச்சலை வரவுள்ள ராஜ்யசபா தேர்தல் ஏற்படுத்தி இருக்கிறது. மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து ஆறு பேரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் நான்கு சீட்டுகள் திமுக உறுப்பினர்கள். திமுக தரப்பிலிருந்து வில்சன் சண்முகம், அப்துல்லா, வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறுகிறார்கள். அதிமுக தரப்பிலிருந்து அன்புமணி, சந்திரசேகர் ஆகியோர் பதவிக்காலம் முடிகிறது.
தொழிற்சங்கத் தலைவர் சண்முகத்துக்கு பதில் மக்கள் நீதி மையத்தைச் சேர்ந்த கமலஹாசன் ராஜ்யசபா உறுப்பினர் ஆகிறார். இது பற்றி கருத்து தெரிவித்த கமல் ஹாசன் நான் ரசிகர்களைப் பெற்றிருக்கிறேன் வாக்காளர்களை பெறவில்லை என சொன்ன கருத்து நடிகர் விஜயை வம்புக்கு இழுப்பதாக அமைய அது பற்றிய விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.
குடைச்சல் கொடுக்கும் திமுக:
அதிமுக தரப்பில் யாரை எம்பி ஆக்குவது என கடுமையான போட்டி நடந்து கொண்டிருக்கிறது. யார் எம்பி ஆனாலும் ஒரு எம்பியை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் தேவை அதன்படி பார்த்தால் அதிமுகவிற்கு 68 எம்எல்ஏக்கள் தேவை. அதில் 62 எம்எல்ஏக்கள் தான் அதிமுகவில் என்ற சூழலில் அதிலும் நான்கு எம்எல்ஏ ஓபிஎஸ் வசம் சென்றுவிட்டனர். பாஜக ஆதரவு இல்லாமல் அதிமுக இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முடியாது. திமுக நான்கு ராஜ்யசபா உறுப்பினர்களுடன் நிறுத்திக் கொண்டால் போட்டியின்றி அதிமுகவின் இரண்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால் அதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்று ஐந்து ராஜ்யசபா உறுப்பினர்களை களத்தில் இறக்க திமுக திட்டமிட்டுள்ளது.
ஐந்தாவதாக வரும் ராஜ்யசபா உறுப்பினர் ஒரு போட்டியை உருவாக்குவார் அவரை அதிமுக சார்பில் இரண்டாவதாக நிறுத்தப்படும் உறுப்பினர் எதிர்கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரே ஒரு ராஜ்யசபா உறுப்பினரை தேர்ந்தெடுக்க தகுதி பெற்றுள்ள அதிமுக திமுக ஏற்படுத்தும் போட்டியை சமாளிக்க வேண்டுமென்றால் பாமாக மற்றும் பாஜக ஆதரவை பெற வேண்டும். தற்பொழுது பாமாகவும், பாஜகவும், அதிமுக கூட்டணியில் இல்லை .இவர்களுடன் கூட்டணி ஏற்படுத்தினால் தான் அதிமுகவால் இரண்டு மாநிலங்களவை உறுப்பினரை பெற முடியும். பாஜக அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தருவதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது. பாஜக சப்போர்ட் உடன் அன்புமணி எந்த சிக்கலும் இல்லாமல் வெற்றி பெற்றுவிடுவார். ஆனால் வேறு யாராயாவது நிறுத்தினால் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என பாஜக தரப்பில் இருந்து ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மன உளைச்சலில் எடப்பாடி:
ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இருந்து கழண்டு செல்லும்போது தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் தருகிறேன் என வாக்குறுதி கொடுத்து தான் எடப்பாடி அவர்களை கூட்டணியில் சேர்த்தார். தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது எடப்பாடியை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னொருபுறம் ராஜ்யசபா சீட்டில் போட்டியிட சேலம் இளங்கோவன், ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன், கோகுல இந்திரா, கிருத்திகா, முனியசாமி ராஜ், சத்தியன், தென்மலை ஆகியோரும் போட்டா போட்டி போட்டு வருவது தகவல். இதனால் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என எடப்பாடி திணறிக் கொண்டிருக்கிறார்.
எஸ்.பி.வேலுமணி - அமித் ஷா:
அதிமுக பாஜக கூட்டணி அமைவதற்கு அச்சாரமாக இந்த ராஜ்யசபா தேர்தல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி தனது மகன் திருமணத்திற்கு பாஜகவில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் பத்திரிக்கை கொடுத்து அழைப்பு விடுத்துள்ளார். அவர் அமித்ஷாவை இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வைக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார். அமித்ஷா இந்த திருமணத்திற்கு வந்தால் எடப்பாடியும் அமித்ஷாவும் திருமண விழாவில் நேரடியாக சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இது அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துவிட்டது என்பதை அறிவிக்கும் விழாவாக கருதப்படும்.
பாஜக கேட்ட போல் தனது சொத்துக்களை சசிகலா 80% கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் சசிகலா மீது பரிவுடன் இருக்கும் பாஜக அவரையும் ஓபிஎஸ்ஐயும் கட்சிக்குள் இணைத்து அதிமுகவை பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமியையே கட்சியை விட்டு தூக்க பாஜக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. இதற்காக எடப்பாடி மீது பல ரெய்டு நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிடவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜகவுடன் சமரசப் போக்கை கடைபிடிக்கும் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோஷம் அதிமுகவில் வழுத்து வருகிறது. இதில் எந்த முடிவு எடுத்தாலும் தனக்கு ஆபத்துதான் என எடப்பாடி மிரண்டு போய் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சமரச பேச்சுக்கு வாருங்கள் என அமித்ஷா மெசேஜ் அனுப்பி எடப்பாடியை மிரட்ட அதிமுக அதிர்ந்து போயிருக்கிறது என்கிறது அதிமுக வட்டாரங்கள். ஜக்கி வாசுதேவின் விழாவிற்கு வரும் அமித் ஷாவிடம் இந்த பஞ்சாயத்து போகும் என்பதால் தான் இந்நிகழ்ச்சியில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாஜகவா..? ஒன்றிணைப்பா..? செங்கோட்டையனுடன் சேர்ந்து எடப்பாடியாரை சந்தித்த தங்கமணி..!