×
 

ஈரோடு கிழக்கு இடைதேர்தல்...வாய்ப்பை தவறவிட்ட அதிமுக...

ஈரோடு கிழக்கு இடைதேர்தலை புறக்கணிப்பதன் மூலம் அதிமுக வாய்ப்பை தவற விட்டுள்ளது. அதிமுக பயந்து ஒதுங்குகிறது என்கிற அவப்பெயருக்கும் இது காரணமாக அமைந்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் முந்திக்கொண்டு காங்கிரஸ் போட்டியிடும் என செல்வபெருந்தகை அறிவித்தார். ஆனால் திமுகவின் கணக்கு வேறாக இருந்தது தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் கட்சியின் மீது, ஆட்சியின் மீது கடுமையான அவப்பெயர் உண்டாகி உள்ள நிலையில் இந்த தேர்தலை பயன்படுத்தி மிக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வதன் மூலம் ஒரு உற்சாகத்தை தொண்டர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கலாம் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் காங்கிரஸிடமிருந்து ஈரோடு கிழக்கு தொகுதியை திமுக வலுக்கட்டாயமாக பெற்றுக் கொண்டது.

வேறு வழியில்லாமல் பெரியண்ணன் திமுகவிற்கு தொகுதியை விட்டுக் கொடுத்து திமுகவின் வெற்றிக்காக பாடுபட 20க்கும் மேற்கண்டவர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார் செல்வ பெருந்தகை. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே திமுக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்கிற எண்ணத்தை வைத்திருந்தது. காரணம் மிகப் பெரும் தொகை செலவழித்து காங்கிரஸ் கையில் தொகுதியை மீண்டும் கொடுப்பதை விட சந்திரகுமாரை வேட்பாளராக நிறுத்தி தொகுதியை திமுக எடுத்துக் கொள்வது என்பது தான் சரியாக இருக்கும் என்று சீனியர் அமைச்சர்கள், தொகுதி பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் தலைமையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தொகுதியை திமுக தன் வசமாகி கொண்டது.

இதையும் படிங்க: வேண்டாம் புறக்கணிப்பு.. அதிமுகவுக்கு சரிவு தொடங்கிவிடும்.. அதிமுக மீது திருமா கரிசணம்!

இந்த தேர்தலில் எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று அதிமுக போட்டியிடுமா? என்பதே, இதற்கு பலரும் பல காரணங்களை கூறினர். கடந்த முறை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது. காரணம் அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் முறையாக நடக்காது என்று கூறி மிகப்பெரிய கட்சியான அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது. ஆனால் ஈரோடு கிழக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம் மிக முக்கியமானது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கின்ற நிலையில் ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அதிமுக, ஆளும் திமுக ஆட்சியின் மீது உள்ள கோபத்தை கிளரும் வகையில் பிரச்சாரமாக மாற்றிக் கொள்ள வேண்டும், அதிமுகவின் பிரச்சார பலத்தினால் திமுகவை திணர அடிக்க வேண்டும், திமுக அரசின் மீது உள்ள மக்களின் கோபத்தை இந்த தேர்தலில் பிரச்சாரமாக பயன்படுத்தி முகத்திரையை கிழிக்க வேண்டும் என்றெல்லாம் அதிமுகவுக்குள் பலரும் கூறி அதிமுக கட்டாயம் ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

அரசியல் விமர்சகர்கள் பலரும் அதிமுக இந்த தேர்தலில் போட்டியிட்டு பிரச்சார களமாக ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தை பயன்படுத்தவேண்டியது அவசியம், இதன் மூலம் கடந்த முறையை விட கூடுதல் வாக்குகள் பெற்றாலே அது அதிமுகவுக்கு உற்சாகமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தனர்.

 அதிமுக தலைமை உடனடியாக இதுபற்றி முடிவு எடுக்காமல் தள்ளி போட்டது. கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் இம்முறையும் தேர்தலில் போட்டியிட மனு செய்ய தலைமைக்காக வந்தார். அவரையும் காத்திருக்க சொன்ன அதிமுக தலைமை திடீரென புறக்கணிப்பதாக அறிவித்தது. அதிமுகவின் இந்த முடிவு வரலாற்று தவறு நல்ல வாய்ப்பை அதிமுக தவற விடுகிறது. பொதுத்தேர்தலுக்கு ஓராண்டே இடையில் இருக்கும்போது அதிமுக தைரியமாக போட்டியிடுவதன் மூலம் ஆட்சிக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை கட்டமைக்க முடியும், ஆளுங்கட்சித்தான் வெல்லும் என்றாலும் பாஜகவுடன் கூட்டு இல்லாத நிலையில் அதிமுகவின் பிரச்சாரம் அதற்கு கூடுதல் வாக்குகளை பெற்றுத்தரும். அதிமுகவின் கோட்டையிலேயே அதிமுக போட்டியிட தயங்குவது எதிர்பிரச்சாம் செய்ய வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதை அதிமுக தலைமை மறந்து விட்டனர்.

பாஜக, தவெக போட்டியிடாத நிலையில் தேமுதிக கூட்டணியில் உள்ள நிலையில் அதிமுக போட்டியிட்டிருந்தால் திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவுக்கு விழுவதற்கு வாய்ப்பு அதிகம். தொகுதி பொறுப்பாளர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்று வந்த பிறகு அவருக்கு எதிரான பிரச்சாரமாகவும், பொதுமக்களை பாதிக்கும் விஷயங்கள், மின் கட்டண உயர்வு, அண்ணா யூனிவர்சிட்டி பிரச்சனை, திமுக அமைச்சர்கள் செயல்பாடு உள்ளிட்ட.பல்வேறு பிரச்சனைகளை பிரச்சாரமாக அதிமுக கொண்டு செல்லும் வாய்ப்பை தவற விட்டு விட்டார்கள் என்கிற விமர்சனம் அதிமுக மீது வைக்கப்படுகிறது. 

அதிமுக தனது உறுதியான செயல்பாட்டை இத்தேர்தலில் செயல்படுத்தி தான் மாற்று சக்தி என்பதை நிரூபித்திருக்க வேண்டும். ஆனால் அதிமுக அதை செய்யாததால் பயந்து ஒதுங்குவதாக ஒரு தோற்றத்தை அதிமுகவே கட்டமைத்துள்ளதாக  விமர்சனம் வைக்கப்படுகிறது. மொத்தத்தில் அதிமுக இந்த இடைத்தேர்தலை  பயன்படுத்தி பிரச்சாரத்தை கொண்டுச்சென்றிருக்கலாம், நாதக தவிர வேறு எதிர்க்கட்சிகள் போட்டியிடாத நிலையில் திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைத்திருக்கலாம், ஆனால் அதை அதிமுக தவறவிட்டு வரலாற்று பிழை செய்துள்ளதாக கருத வேண்டியுள்ளது.

இதையும் படிங்க: சட்டமன்றத்தில் வெறும் வாக்கிங்.. இந்த ஆளுநர் தேவையா.? உதயநிதி ஸ்டாலின் பொளேர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share