சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடையை கொட்டி அராஜகம்.. இபிஎஸ் கடும் கண்டனம்..!
பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் அவர் இல்லாதபோது திடீரென புகுந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை வீசிவிட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எந்தவொரு அரசியல் கட்சியில் நேரடியாக இல்லாதபோதும் தமிழக அரசியல் களத்தில் விமர்சகராக தவிர்க்க முடியாத ஒருநபராக திகழ்பவர் சவுக்கு சங்கர். சவுக்கு என்றபெயரில் யூடியூப், இணையதளம் என்ற பெயரில் நடத்தி வரும் இவர் ஆளுங்கட்சியில் யார் வந்து அமர்ந்தாலும் அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சனத்துக்கு உள்ளாக்குவது வழக்கம்.
அந்த வகையில் தற்போதைய ஆளுங்கட்சியான திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து சிறைக்கும் சென்றுவந்தார். இந்நிலையில் இன்றுகாலை 9.30 மணியளவில் அவர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு தூய்மைப் பணியாளர்கள் எனக்கூறிக்கொண்டு 50-க்கும் மேற்பட்டோர் திடீரென புகுந்துள்ளனர். தனியாக இருந்த அவரது தாயாரிடம் தகாத வார்த்தைகள் கொண்டு பேசியுள்ளனர். வெளிவாசல் தொடங்கி வீடு முழுவதும் சாக்கடையைக் கொட்டியும், மனிதக்கழிவுகளை வீசியும் அவர்கள் அராஜகம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நல்லா தூண்டி விடுறாங்க.. அராஜக போக்கை கையாளும் திமுக.. கொதித்தெழுந்த அண்ணாமலை..!
ஒருகட்டத்தில் யூ டியூபர் சவுக்கு சங்கரையே செல்போனில் வீடியோ காலில் அழைத்து அவரிடமும் கேட்கத்தகாத சொற்களால் திட்டியுள்ளனர்.
இதுபற்றி தன்னுடைய முகநூல் பக்கத்தில் சவுக்கு சங்கர் வெளியிட்ட பதிவு பின்வருமாறு..
இன்று காலை 9.30 மணி முதல், துப்பறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர்.
என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்தனர். 9.30 மணி முதல் இது வரை வரை போராட்டம் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை. அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இந்த தாக்குதலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனசாட்சி உள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய சம்பவமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கொடுமையான செயலைச் செய்த கும்பலையும், அதன் பின்னணியில் உள்ளவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீட்டை சூறையாடிய கும்பல்.. வீடியோ காலில் கொலை மிரட்டல்..!