ராமநாதபுரம் எம்.பி. பதவியை ராஜினாமா பண்ணுங்க.. நவாஸ் கனியை நெருக்கும் அண்ணாமலை!
திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவை உண்டதை அவர் வாயாலேயே ஒப்புக்கொண்டு விட்டதால் எம்.பி. பதவியை நவாஸ் கனி ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலைக்கு, தனது ஆதரவாளர்களுடன் சென்ற, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ஹிந்து மக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து, அவருடன் வந்தவர்கள் அசைவ உணவு உண்ணும் புகைப்படத்தை, அவரது சமூக வலைத்தளப் பக்கத்திலேயே பகிர்ந்திருந்தார். பொதுமக்கள் மற்றும் பாஜக சகோதர சகோதரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன், தற்போது அசைவ உணவு உண்டதை நிரூபித்தால், தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்கிறார்.
அப்படிக் கூறும் காணொளியிலேயே இறுதியாக, தனது ஆதரவாளர்கள், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலையில், அசைவ உணவு உண்டதையும் ஒப்புக்கொள்கிறார். நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் கட்டுப்படுவேன் என்ற உறுதிமொழியை ஏற்று, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற நவாஸ் கனி, அதனை முழுமையாக மீறியிருக்கிறார்.
மேலும், திருக்கோவில் மலையில் அசைவ உணவு உட்கொண்டதை, அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தன் ஒரே நோக்கம், இந்து சமய மக்களைப் புண்படுத்துவது மட்டுமே.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் நடப்பது என்ன? ...தர்காவுக்கு செல்ல அனுமதி மறுப்பா?..
தான் கூறியதைப் போல, கோவில் மலையில் அசைவ உணவு உண்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று கூறியிருக்கும் நவாஸ் கனி, அவரது வாயாலேயே உண்மையை ஒப்புக்கொண்டதால், உடனடியாக அவர் பதவி விலகுவதோடு, தமிழ் மக்களின் மனம் புண்படும்படி, முருகப் பெருமான் திருக்கோவிலை அசுத்தப்படுத்தியதற்கு, பொதுமக்களிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “ஒரே பொய்யா பேசுறாங்க”... அண்ணாமலையையும், எச்.ராஜாவையும் புடிச்சி ஜெயில்லா போடுங்க..! ஆவேசமான நவாஸ் கனி!