×
 

மோடி செலவைதான் பார்ப்பீங்க.. 4 ஆண்டுகளில் தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணச் செலவு தெரியுமா..?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்துக்காக தமிழக அரசு இதுவரை ரூ.7.12 கோடி செலவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 மே 7ம் தேதி பதவி ஏற்றதிலிருந்து அவரின் வெளிநாட்டு பயணத்துக்காக ரூ.7.12 கோடியை தமிழக அரசு செலவிட்டுள்ளது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. போக்குவரத்து செலவு, காப்பீடு,விசா உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் சேர்த்து ரூ.7.12 கோடி செலவாகியுள்ளது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு துபாய் பயணத்துக்கான செலவை மட்டும் அரசு தெரிவிக்க மறுத்துவிட்டது.

இந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவைத் தாக்கல் செய்த காசிமாயான் கூறுகையில் “ மக்களின் பணத்தை செலவிடுவதில் தமிழக அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை, துபாய் பயணச் செலவை மட்டும் ஏன் தமிழக அரசு வெளியிடவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபின் முதல்முறையாக 2022 மார்ச் 24 முதல் மார்ச் 28ம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு துபாய் எக்ஸ்போவுக்காகச் சென்று தமிழகத்துக்கு முதலீட்டுகளை ஈர்க்கும் நோக்கில் பயணித்தார்.

இதையும் படிங்க: நம்பி தான் ஓட்டு போட்டோம்..! முதல்வர் எங்களை கண்டுக்கல.. வேதனையில் ஆசிரியர்கள்..!

முதல்வர் முக ஸ்டாலினுடன் இந்தப் பயணத்தில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வரின் செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ், தனிப்பிரிவு செயலாளர் தினேஷ் குமார் உள்ளிட்ட 11 பேர் சென்றனர் என ஆர்டிஐ தகவல் தெரிவிக்கிறது. ஆனால், இந்தப் பயணத்தில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின்(அப்போது எம்எல்ஏ), மருமகன் கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் சென்றனர்.

அரசு முறைப்பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்லவில்லை, அரசின் செலவில் மக்களின் வரிப்பணத்தில் குடும்ப சுற்றாலாவாக சென்றார் என்று எதிர்க்கட்சியான அஇஅதிமுக விமர்சித்தது. இந்த பயணத்துக்கான செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறத்தியிருந்தார்.

இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக முதல்வரின் குடும்பஉறுப்பினர்கள் பயணச் செலவை திமுக ஏற்கும் என்றார். ஆர்டிஐ மனு தாக்கல் செய்த காசிமாயன் கூறுகையில் “ திமுக எந்த வகையான செலவுகளை மட்டும் ஏற்றது என்பது குறித்து தமிழகஅரசு ஏதும் தெரிவிக்கவில்லை. தங்குமிடம், உள்ளூர் பயணம், பாதுகாப்பு ஆகியவை குறித்த செலவுகளையும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. அமைச்சரின் பதிலில் எந்த தெளிவான அம்சமும் இல்லை” என்றார்.

ஆனால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மேற்கொண்ட துபாய் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக இருந்தது. 6 முதலீட்டாளர்களிடம் சேர்த்து ரூ.6100 கோடிக்கு முதலீட்டை ஈர்த்துள்ளார். இதன் மூலம் 15100 வேலை வாய்ப்புகள் கிடைக்கும என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் உண்மையில் முதலீடு என்பது ரூ.3500 கோடி முதல் ரூ.4270 கோடிதான் வரும், 9 ஆயிரம் முதல் 10500 வேலைவாய்ப்புவரை உருவாகலாம் என தமிழக அரசின் மூத்த உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2023ம் ஆண்டு மே மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றதற்காக ரூ. 26 லட்சத்து 84 ஆயிரத்து 711 தமிழக அரசு செலவிட்டுள்ளது. ஜப்பான் பயணத்துக்கு ரூ.88 லட்சத்து 6ஆயிரத்து 519, 2024, பிப்ரவரி மாதம்  ஸ்பெயின் பயணத்துக்காக ரூ.3.98 கோடியும் தமிழக அரசு செலவிட்டுள்ளது. 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்ல ரூ.1.99 கோடியை தமிழக அரசு செலவிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்துக்காக ரூ.7.12 கோடியை தமிழக அரசு செலவிட்டுள்ளது என ஆர்டிஐ மனுவில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: அறநிலையத்துறை இணை ஆணையர்கள் இடமாற்றம்.. தமிழ்நாடு அரசு நடவடிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share