×
 

விஜய்யின் இஃப்தார் அரசியல் சொல்லும் சேதி... உளவுத்துறை ரிப்போர்ட் ... திமுக ஆதரவு வாக்குகளை அள்ளுகிறாரா?

விஜய்யின் இஃப்தார் அரசியல் அரசியல் ரீதியாக லாபமா? இஃப்தாருக்கு பின் வரும் எதிர்வினைகள் அவருக்கு அரசியல் லாபத்தை தந்துள்ளது என்று சொல்லலாமா? இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக இதுவரை இருந்த திமுகவினருக்கு விஜய் அதிர்ச்சியை தந்துள்ளாரா? ஒரு அலசல்.

தமிழக அரசியல் களத்தில் புதிதாக உதயம் ஆகி இருக்கும் தமிழக வெற்றி கழகம் பயணிக்கும் பாதை ஒவ்வொரு நாளும் எதிரணியினருக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் விஜய்யின் அதிரடி அரசியல் அடுத்தடுத்த அதிர்ச்சியை ஆளுங்கட்சிக்கு ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வரும் என்கின்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. தமிழக வெற்றி கழகம் திமுக அணிக்கு எதிராக அதிமுகவுடன் கை கோர்த்தால் ஆட்சி மாற்றமே நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து.

ஆனால் விஜய், பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் எண்ணம் வேறாக உள்ளது. தமிழக வெற்றி கழகத்தை ஓராண்டுக்குள் ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய முறையில் மாற்றுவது. அதன் பின்னர் தேர்தல் நெருக்கத்தில் தனக்கு வேண்டிய செல்வாக்குள்ள ஒரு கூட்டணியை உருவாக்குவது அல்லது அன்று உள்ள நிலையை வைத்து தனித்து போட்டி விடுவது என்கின்ற எண்ணத்தில் இயங்குகிறார்கள். இதில் தவெக தனித்து நிற்பது என எடுக்கும் நிலைப்பாடு அவர்களுக்கு பின்னடைவை தரும் என்றாலும், அதை ஒரு ஆசிட் டெஸ்ட்டாக தவெக முன்னெடுக்கிறது என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: என்.ஆர்.காங்கிரஸ் - விஜய்யின் தவெக கூட்டணி..? புதுச்சேரியில் பரபரக்கும் அரசியல் களம்.. அதிர்ச்சியில் பாஜக!!

ஒருவேளை அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைத்தால் தமிழக அரசியலில் அது 1996, 2011-க்கு பிறகு ஒரு பெரிய மாற்றத்தை தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழக வெற்றி கழகம் எந்த முடிவு எடுத்தாலும் அதை சுற்றியே தமிழக சட்டமன்றத் தேர்தல் களமும் இருக்கும். இதற்கு சமீப காலமாக பல்வேறு உதாரணங்களை சொல்லலாம். குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக, விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் ஒருவித பதற்றத்தில் இருப்பதை காண முடிகிறது. தங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை, விஜய் ஒரு பொருட்டே அல்ல என்று வெளிப்படையாக சொல்லிக் கொண்டாலும் உள்ளூர அவர்களின் நடுக்கம் பல இடங்களில் வெளிப்படுவதை காணப்படுகிறது.

முதல்வர் தொடங்கி துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பெயரைச் சொல்லாமல் விமர்சனம் செய்வதிலிருந்து அவர்களுடைய பயம் வெளிப்படுவதை காண முடிகிறது. அதே போன்று திமுக விஜய்யை நேரடியாக விமர்சிக்காமல் கூட்டணி கட்சிகளை வைத்து விமர்சிக்க வைக்கும் நிலையையும் பார்க்க முடிகிறது. இத்தனைக்கும் தமிழக வெற்றி கழகம் ஒரு அரசியல் கட்சிக்கான எவ்வித வேகமும்  இல்லாமல் கிட்டத்தட்ட மிக மிக மெதுவாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் கட்சியாக இருக்கும் நிலையிலேயே இப்படி என்றால் மற்ற அரசியல் கட்சிகள் போல் அல்லது மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் போல் விஜய் வேகமாக இயங்கினால் அது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். 

விஜய் சமீபத்தில் தவெகவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் கொண்டாடினார். இதற்கு திரண்ட கூட்டம் உளவுத்துறை மூலம் ஆளுங்கட்சிக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அதே நேரம் விழாவை ஒரு உள்ளரங்க கூட்டமாக தமிழக வெற்றி கழகம் நடத்தி இருப்பது ஆளுங்கட்சிக்கு ஓரளவு நிம்மதியை தந்தது. அந்த நிம்மதி சில நாட்களுக்கு கூட நீடிக்கவில்லை என்பதை இஃப்தார் நிகழ்வு எடுத்துக்காட்டி விட்டது. விஜய் தமிழக வெற்றிக்கழகம் மூலம் இஃப்தார் விருந்தை நடத்த முடிவெடுத்து அதை பொதுவெளியில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏவில் நடத்துவதாக அறிவித்தார். அது முதல் இந்த பிரச்சனை சூடு பிடித்துக் கொண்டது. 3000 பேருடன் விஜய் நேரில் வந்து நோன்பு திறந்த நிகழ்வும் அதற்கு திரண்ட தவெகவினர் கூட்டமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நோன்பு வைத்து பின்னர் இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டு நோன்பு திறந்து தொழுகையிலும் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இதெல்லாம் நடக்க கூடியதா என்று அசட்டையாக பலரும் இருந்த நிலையில் வெள்ளை லுங்கி, வெள்ளை சட்டை, வெள்ளை குல்லா அணிந்து அரங்கிற்கு வந்தார். விஜய் வருகையை ஒட்டி ராயப்பேட்டை முழுவதும் ஆக்கிரமித்து இருந்த ரசிகர்கள் கூட்டம் அரங்கிற்குள் முண்டியடித்து கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவானது. விஜய் இஸ்லாமியர்களுடன் தரையில அமர்ந்து நோன்பு திறந்தது, பின்பு தொழுகையில் ஈடுபட்டது, மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அதன் பின்னர் சில நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு தனது தேர்தல் பிரச்சார வாகனத்தில் நின்றபடி கையை அசைத்தப்படி விஜய் பட்டினப்பாக்கம் நோக்கி சென்றது யாரும் எதிர்பாராத ஒரு மூவ் என்று சொல்லலாம்.

விஜய் இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டதும் அதற்கு திரண்ட கூட்டத்தையும் பார்த்து உளவுத்துறை போட்ட ரிப்போர்ட்டில் இஸ்லாமியர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் இஃப்தார் விருந்து நடத்தி முடித்ததன் மூலம் இஸ்லாமிய பெருமக்கள் மத்தியில் எளிதாக ரீச் ஆகி இருக்கிறார் என்று ரிப்போர்ட் போடப்பட்டிருக்கிறது. உடனடியாக சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாக கருத்துகள் அதிகரித்தது.  எதிர் கருத்தாக ஏற்கனவே எடுத்து வைத்த கத்தி, பீஸ்ட் உள்ளிட்ட பட காட்சிகள் போடப்பட்டாலும் அவருக்கு ஆதரவாக வந்த கருத்தை யாராலும் மடைமாற்ற முடியவில்லை.

விஜய்யின் இஃப்தார் விருந்துக்கு எதிரான எந்த எதிர்ப்பு குரலையும் நேரடியாக அரசியல் கட்சி தலைவர்களால் பதிவு செய்ய முடியவில்லை. விஜய்யின் இஃப்தார் விருந்து சொல்லும் செய்தி என்ன பார்ப்போம்,  
தமிழகத்தில் இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் அன்பை பெற்ற கட்சி என்று சொன்னால் அதன் முழு வடிவமும் திமுகவைச் சாரும். காயிதே மில்லத் காலம் தொடங்கி திமுக இஸ்லாமியர்களின் தோழனாக தன்னை காட்டிக்கொள்கிறது.  அதன் பின்னர் எம்ஜிஆர், ஜெயலலிதா அரசியலில்  முழுதுமாக இஸ்லாமியர்கள் வாக்குகளை பெற முடியாமல் இருந்தனர். அதற்கு காரணம் கருணாநிதியின் இஸ்லாமியர் ஆதரவு அரசியல் என்று சொல்லலாம். இடையில் 1999-ம் ஆண்டுக்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது, கோத்ரா கலவரத்தை ஆதரித்தது போன்ற செயல்களால் இஸ்லாமியர்கள் திமுகவின் மீது நம்பிக்கை இழக்க தொடங்கியதை காணலாம்.

அதன்பின்னர் ஜெயலலிதா எதிர்ப்பு நிலைப்பாடு எடுத்து பின்னர் பாஜகவுடன் கூட்டே இல்லை என அறிவித்து இஸ்லாமியர்களின் நம்பிக்கையை ஓரளவு பெற்றார். ஆனாலும் திமுகவே இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக இருந்ததை காண முடிந்தது. தங்களை விட்டு இஸ்லாமியர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள் என்கின்ற மிதப்பில் திமுக இஸ்லாமியர்களுக்கான எந்த பிரதிநிதித்துவத்தையும் பெரிதாக அளிக்காமல் இருந்ததையும் காண முடிந்தது. இந்த நிலையில் விஜய் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகையின் இஃப்தார் விருந்தை நடத்தியதும், அதில் தானும் கலந்து கொண்டு நோன்பிருந்து, நோன்பு துறந்து, தொழுகையில் ஈடுபட்டதும் கடைகோடி தமிழகம் வரை இஸ்லாமிய பெருமக்களின் நெஞ்சங்களில் சென்று சேர்ந்து இருக்கிறது.

நம்மவராக இருக்கிறார் இவருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கக் கூடாது என்கின்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவி வருவதை காண முடிகிறது. இது திமுகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்திருப்பதை காணலாம். இதுவரை இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் வாக்குகள் தங்களை விட்டு எங்கும் நகராது என்கின்ற மிதப்பிலிருந்த ஆளுங்கட்சியினருக்கு முதல் பேரிடியாக இந்த இஃப்தார் நிகழ்வு நடந்திருக்கிறது என்று கூறலாம். இதற்கு அடுத்து விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இஸ்லாமியர் வாக்குகளை பெரும் வகையில் இருந்தால் தமிழகத்தில் ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் சொன்னது போல் திமுக ஆதரவு வாக்குகளையே விஜய் கவர்ந்திழுக்கும் நிலை வரலாம்.

தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் வாக்கு சதவீதம் பெருமளவில் இருப்பதால் விஜயின் இந்த மூவ் ஆளுங்கட்சிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்க முடிகிறது. இதுவரை இஸ்லாமிய மக்களும் திமுக கூட்டணியை தவிர மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்க முடியாமல் இருந்த நிலையில், பாஜகவின் பி டீம் என முத்திரை குத்தியும் விஜய் இஸ்லாமிய மக்களின் அன்பை பெற்றதன் மூலம் திமுகவின் பெரிய ஆதரவான இஸ்லாமியர் வாக்குகள் விஜய்க்கு போக வாய்ப்புள்ளது. விஜய் திமுக எதிர்ப்பு வாக்குகளை மட்டுமல்ல, திமுகவின் ஆதரவு வாக்குகளையும் கவர்வதன் மூலம் ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார் என்பதே உண்மை. முதல் மூவ் சிறப்பாக உள்ளது அடுத்தடுத்த மூவ்களில் சாதிப்பாரா பொறுத்திருந்து பார்ப்போம். 

இதையும் படிங்க: குற்றமே நடக்கலைன்னு சொன்னோமா..? விஜய்க்கு திமுக எம்.பி. பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share