தெறி அரசியல்... திமுக பாணியை கையில் எடுக்கப்போகும் விஜய்... கிடுகிடுக்கும் அண்ணா அறிவாலயம்..!
விஜயே அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் இன்னும் கூட விஜய் ரசிகர்கள் ரஜினி, அஜித் ரசிகர்களோடு மோதிக்கொள்வது மாதிரியான நிகழ்வுகள் ரசிக்கும் படியாக இல்லை என கூறப்படுகிறது.
நடிகர் விஜயின் தவெக வருகைக்குப் பிறகு தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே இருந்து வருகிறது. முக்கியமாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் குறித்தே தினம் ஒரு தகவல் வந்து கொண்டே இருக்கிறது. வியூகம், கூட்டணி ஆலோசனை என தமிழக வெற்றிக் கழகம் சூறாவளி போல சுழன்று வருகிறது. அந்த வகையில் தேர்தலுக்கு முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் கால் சென்டர்களை அமைக்க தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாக இருக்கிறது. 2021 தேர்தலின் போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது.
இதன் மூலம் தொகுதிவாரியாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செல்ல தொகுதி சார்ந்த பிரச்சனைகள் புகார் மனுக்களாக பெட்டியில் வாங்கப்பட்டன. ஆட்சிக்கு வந்ததும் அந்த மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியுடன் மனுக்கள் வாங்கப்பட்ட நிலையில் அந்த பிரச்சார யுக்திக்கு மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த யுக்தியை வகுத்துக் கொடுத்தது திமுகவிற்கு அப்போது தேர்தல் பணிகளை கவனித்து வந்த பிரசாந்த் கிஷோர். இந்த பாணியில் தற்போது விஜய் கட்சிக்கும் கால் சென்டர் அமைக்க பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மாறும் களம்… வியூக சாலை… அரசியலில் விஜயின் நண்பர்கள் யார்..? எதிரிகள் யார்..?
சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இருக்கும் பிரச்சனைகளை ஆன்லைன் மூலமாக புகார்களாக பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது வார்டு வாரியாக பொதுமக்கள் தொலைபேசி எண்களை சேகரித்து கால் சென்டர் மூலமாக தொடர்பு கொண்டு குடிநீர், சாலை, மருத்துவ வசதி, மின்சார வசதி ஆகியவற்றில் ஏதேனும் குறைகள் இருந்தால் புகார்களாக பெற திட்டம் போடப்பட்டுள்ளது. இந்த கால் சென்டர் பணிக்காக ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் திறமை வாய்ந்த நபர்கள், தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவர்களை வேலைக்கு எடுக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரசாந்த் கிஷோர் - விஜயை சந்தித்தபோது தவெகவில் அவருக்கான ரோல் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனென்றால் தாம் நடத்தி வந்த ஐபேக் நிறுவனத்தில் இருந்து விலகிய பிரசாந்த் கிஷோர் புதிதாக அரசியல் கட்சி தொடங்கினார். இந்நிலையில் விஜய் கட்சியில் தேர்தல் வியூகப் பணிகளை கவனிக்க வேண்டும் என்பதற்காகவே குஜராத்தில் ஸ்மார்ட் சென்செக்ஸ் என புதிதாக ஒரு நிறுவனத்தை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜயிடம் ஆலோசனை நடத்திய பிரசாந்த் கிஷோர் இரண்டு அறிக்கைகளை சமர்ப்பித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில், 2021 தேர்தலில் திமுகவிற்கு வியூகம் அமைத்த அறிக்கை உட்பட இரண்டு அறிக்கைகள் விஜயின் மேஜைக்கு வந்திருக்கிறதாம்.
அந்த அறிக்கையை வைத்து அதிலிருந்து என்னென்னவெல்லாம் மேம்படுத்தலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறதாம். இது ஒரு பக்கம் இருக்க தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கும் தொண்டர்களே பெரும்பாலானவர்கள் இன்னும் அரசியல் புரிதல் இல்லாமல் ரசிக மனப்பான்மையிலேயே இருப்பது பிரசாந்த் கிஷோர் குழுவுக்கு சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சி தொடங்கியபோதே ரசிகர்களை எப்படி அரசியல் படுத்துவார் என்ற சவால்தான் விஜய்க்கு முன்பு இருந்தது. அந்த கேள்விதான் தற்போது வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் எழுந்திருக்கிறதா?
விஜயே அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் இன்னும் கூட விஜய் ரசிகர்கள் ரஜினி, அஜித் ரசிகர்களோடு மோதிக்கொள்வது மாதிரியான நிகழ்வுகள் ரசிக்கும் படியாக இல்லை என கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் எதிர் தரப்பினர் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு இன்னும் ஆழமான பதிலடியை கொடுக்க வேண்டும். அதற்கு ரசிகர்களை அரசியல்படுத்த வேண்டும் என்பதும் பிரசாந்த் கிஷோருக்கு முன் இருக்கும் சவாலாக மாறியிருக்கிறது.
இதன் காரணமாக தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் நடத்தப்பட்டு வரும் அரசியல் பயிலரங்களை அதிக அளவில் நடத்தி அரசியல் கற்றுக் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிக அளவில் அரசியல் பயிலரங்கங்களை உருவாக்கி ரசிகர்கள் தொண்டர்களுக்கு கற்றுக் கொடுத்து தேர்தலுக்கு தயார்படுத்தும் பணிகளும் தமிழக வெற்றி கழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'செங்கோட்டையன், எடப்பாடியாரை விட பெரிய கொம்பனா..?' விஜயை விமர்சித்தது ஏன்? - சீமான்