இது மகா கும்பமேளா இல்ல... மரண கும்பமேளா.. யோகி ஆதித்யநாத் மீது மம்தா பானர்ஜி ஆவேச தாக்குதல்.!
மகா கும்பமேளா இப்போது மிருத்யு கும்பமேளாவாக (மரண கும்பமேளா) மாறிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 55 கோடி பேர் திரிமேனி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரப் பிரதேச அரசு கூறியுள்ளது. அதே நேரத்தில் கும்பமேளாவில் நிகழ்ந்த மரணங்கள் பற்றி உண்மையான எண்ணிகையை தெரிவிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
“நான் மகா கும்பமேளாவை மதிக்கிறேன். புனித கங்கை அன்னையை மதிக்கிறேன். ஆனால், இந்த கும்பமேளாவில் எந்தத் திட்டமிடலும் இல்லை. அதனால், மகா கும்பமேளா இப்போது மிருத்யு கும்பமேளாவாக (மரண கும்பமேளா) மாறிவிட்டது. விஐபிகளுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படும் நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை.
பணக்காரர்கள், விஐபிக்கள் ரூ.1 லட்சத்துக்கும் கூடாரங்கள் பெறுவதற்கு வசதிகள் இருக்கின்றன. ஆனால், ஏழைகளுக்கு கும்பமேளாவில் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.
கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்படுவது சாதாரணமானதுதான். ஆனால், உரிய ஏற்பாடுகளை செய்து தருவது அரசின் முக்கிய கடமை. நீங்கள் ( உத்தரப் பிரதேச அரசு) என்ன ஏற்பாடுகள் செய்திருந்தீர்கள்? இந்த நிகழ்ச்சியை ஏன் நீங்கள் மிகைப்படுத்தினீர்கள்? சரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பின்பு கும்பமேளாவுக்கு எத்தனை கமிஷன்கள் அனுப்பப்பட்டன?
கும்பமேளாவில் இறந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்யாமலேயே மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மக்கள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறி அவர்களுக்கு இழப்பீடும் மறுக்கப்படுகிறது. இறப்புச் சான்றிதழ் இல்லாமல் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதால், நாங்கள் இங்கு அவற்றுக்கு உடற்கூராய்வு செய்தோம். இந்த மக்கள் எவ்வாறு இழப்பீடு பெறுவார்கள்?" என்று மம்தா பானர்ஜி காட்டமாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: கும்ப மேளாவுக்கு படையெடுப்பு: கூட்ட நெரிசலில் 18 பேர் பலி... டெல்லியில் நடந்தது என்ன..?