தொகுதி மறுசீரமைப்புத் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 7 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் சென்னை வரவுள்ளனர். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது..
அனைவருக்கும் வணக்கம்,... மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்படும்.அப்படி நடந்தால், இந்தியாவில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது. ஜனநாயகத்தின் மதிப்பும் இருக்காது. நாடாளுமன்றத்தில் நம் குரல் நசுக்கப்படும். நம் உரிமைகளை நிலைநாட்ட முடியாது.
இதையும் படிங்க: மணிப்பூராக மாறும் நாக்பூர்.. எதிர்க்கட்சிகள் சாடல்..! வன்முறைக்கு காரணமே திரைப்படம்.. மகாராஷ்டிரா முதல்வர் புதிய விளக்கம்..!
மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்களுக்கு, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு தண்டனை வழங்கக் கூடாது. இது மாநிலங்களை அவமதிக்கும் செயல்.
2026-ல் தொகுதி மறுவரையறை நிச்சயமாக நடந்தே ஆக வேண்டும். அப்போது மக்கள்தொகை அடிப்படையில் நடந்தால் எம்.பி.க்கள் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும். இது எம்.பி.க்கள் எண்ணிக்கை சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சினை. ஆகவே நம்மைபோல பாதிக்கப்பட்ட பிற மாநிலங்களையும் கூட்டி நாளைஆலோசனைக்கூட்டம் நடத்துகிறோம்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் எங்களுடன் இணையும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களை நான் மனதார வரவேற்கிறேன். இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் நியாயமான பிரதிநிதித்துவத்தைக் கோர கைகோர்த்துள்ளன. இது நமது கூட்டுப் பயணத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட தருணம். இது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும். ஒரு இயக்கத்தின் தொடக்கமாகும். இந்திய கூட்டாட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள்.
நாளை நடைபெறவுள்ள கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நமது நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக வெற்றியடையும். நமது முன்னெடுப்பு இந்தியாவை காக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் வீடுகளுக்கு சோலார் பேனல்.. சந்திரபாபு அதிரடி..!