புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் மார்ச் 12-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விவாதமும், எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தும் வருகின்றனர். இதனிடையே சட்டப்பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், புதுச்சேரி நகரப்பகுதியில் 2, கிராமப்புறங்களில் 2 மற்றும் காரைக்காலில் 1-நீட் பயிற்சி மையம் அரசு சார்பில் தொடங்கப்படும். வரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளி நாட்களிலும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.

அரசு பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு கருதி டிராக்கிங் ஸ்மார்ட் அடையாள அட்டை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும். புதுச்சேரியில் இந்தாண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தெரு விளக்குகளும் எல்.இ.டி விளக்குகளாக மாற்றப்படும். மின்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும். புதுச்சேரியில் 500 பள்ளிகளில் பெண் பிள்ளைகள் தங்களது குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்படும். காவல் துறையில் 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சீருடைபடி இந்த மாதத்திற்குள் வழங்கப்படும்.
இதையும் படிங்க: மும்மொழிக்கு ஆதரவளித்த முதல்வர்... வெளிநடப்பு செய்த திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள்!!

பாரதிதாசன் பெண்கள் கல்லூரி, புதுவை பல்கலைக் கழகம் உள்ளிட்ட அனைத்து நகர, கிராமப்புற கல்லூரிகளுக்கும் இலவச பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் பகுதியிலும் இலவச பஸ் இயக்கப்படும். சென்டாக் மூலம் விண்ணப்பிக்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் விலக்கு அளிக்கப்படும். புதுச்சேரியில் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை 2007/08 வரை வழங்கப்பட்டது. அதற்கு பின் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. வரும் நிதியாண்டில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

2024/25ஆம் ஆண்டு வரை விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை ரூ.9.38 கோடி ஆகும். இதன் மூலம் பதக்கம் வென்ற 1840 விளையாட்டு வீரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சம்பளம் ரூ.10,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
இதையும் படிங்க: குடும்பத்தலைவிகளுக்கு ஜாக்பாட்... முதலமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு...!