கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி – பூவாத்தாள் தம்பதிக்கு, வினோத்குமார்(25), கனகராஜ்(22), கார்த்திக்(19) என மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் மூவருமே சுமைதூக்கும் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டில், கனகராஜ், வேறு சாதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணைக் காதலித்துள்ளார். அவரை திருமணம் செய்ய கனகராஜ் வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக கனகராஜின் சகோதரர்கள் இதைக் கடுமையாக ஆட்சேபித்துள்ளனர்.
வர்ஷினி பிரியா வீட்டிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் வீட்டை விட்டு வெளியேறி கனகராஜின் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால், அவரை கனகராஜின் குடும்பத்தினர் கடுமையாக விமர்சித்து, திருப்பி அனுப்பி விட்டனர்.
தனது வீட்டுக்கும் திரும்ப முடியாத நிலையில், மீண்டும் கனகராஜ் வீட்டிற்கு வர்ஷினி பிரியா வந்தபோது மறுபடியும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கனகராஜின் தந்தை கருப்பசாமி, தனது மகன் கனகராஜை தனியாக வீடு பார்த்துச் செல்லுமாறும் குடும்பத்தாரை சமாதானம் செய்த பிறகு, திருமணம் செய்து வைப்பதாகவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் இந்த ஏற்பாட்டை விரும்பாத அண்ணன் வினோத்குமார், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து, 2019 ஜூன் 28ஆம் தேதியன்று கனகராஜின் வீட்டிற்குச் சென்று, அந்தப் பெண்ணை திருப்பி அனுப்புமாறு தம்பியுடன் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கை கலப்பு ஏற்பட்டது.
அப்போது வினோத்குமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கனகராஜை வெட்டியுள்ளார். அப்போது குறுக்கே வந்த வர்ஷினியையும் அவர் வெட்டித் தாக்கியுள்ளார். இதில் கனகராஜ் அதே இடத்தில் உயிரிழந்தார். வர்ஷினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார்.

பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்த காரணத்திற்காக, தனது உடன் பிறந்த தம்பியை வெட்டிய இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், வினோத் குமாருடன் கந்தவேல், ஐயப்பன், சின்னராஜ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
கடந்த ஜனவரி 23ஆம் தேதியன்று, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி வினோத்குமார் என்று நீதிபதி விவேகானந்தன் குறிப்பிட்டு, மற்ற மூவர் மீதான குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், தண்டனை விவரங்களை ஜனவரி 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
"குற்றவாளி மரண தண்டனை தரும் அளவுக்கான" குற்றத்தைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டதோடு, இந்த ஆணவக் கொலையில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை தர வேண்டுமென்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் பா.மோகன் வலியுறுத்தியுள்ளார். வர்ஷினியின் தாயாரும் குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.

இந்நிலையில், இன்று (ஜனவரி 29) இறுதியாக இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், தண்டனை குறித்து அறிவிக்கப்படுமென்று நீதிபதி குறிப்பிட்டதால், இன்றைய தீர்ப்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இன்று, இது அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்றும் திட்டமிட்டு நடக்கவில்லை எனவும் குறிப்பிட்ட, குற்றவாளி தரப்பு வழக்கறிஞர் சசிகுமார், "வினோத் குமார் தனது தம்பி கனகராஜை தாக்கும்போது, தடுக்க வந்த வர்ஷினி பிரியாவை எதிர்பாராத விதமாகவே தாக்கியுள்ளார்.
அவர் வர்ஷினி பிரியாவை திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்பதால் இதை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது" என்றார். மேலும், வினோத் குமாருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவரது வழக்கறிஞர் சசிகுமார் கோரினார்.

ஆனால், தனது உடன்பிறந்த சகோதரரையே பட்டியலின சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததற்காகப் படுகொலை செய்தது, சாதிய வன்மத்தை வெளிக்காட்டும் செயல் எனக் குறிப்பிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் பா.மோகன், வினோதமாரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்றார்.
மேலும், "75 வருட சுதந்திர இந்தியாவில் இன்றளவும் சாதிய வன்கொடுமை இருக்கும் நிலையில், இரட்டைப் படுகொலை செய்த குற்றவாளி வினோத் குமாருக்கு, இறுதி மூச்சு வரை எந்தச் சலுகையும் இன்றி சிறை தண்டனை எனத் தீர்ப்பு வழங்க வேண்டும். இனி வன்கொடுமை நடைபெறாத வண்ணம் இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக அமைய வேண்டும்" என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், இன்று மாலை ஐந்து மணிக்கு தீர்ப்பை வாசித்த நீதிபதி விவேகானந்தன் வினோத் குமாருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.