கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக, தன்னலம் பார்க்காமல் ஆயிரக்கணக்கான பாம்புகளை காப்பாற்றி வனப்பகுதியில் விட்டு பாதுகாத்தவர் சந்தோஷ். இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு பொது மக்களையும் பாதுகாத்துள்ளார். அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்து வந்த சந்தோஷிற்கு பாம்பே எமனாக மாறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 39 வயதான சந்தோஷ் குமார். பாம்பு பிடி வீரரான இவர், குடியிருப்பு பகுதிகளின் நுழையும் பாம்புகளை மீட்டு பத்திரமாக வனப்பகுதியில் விடும் பணியை செய்து வந்தார். கொடிய விஷம் நிறைந்த ராஜ நாகம், கட்டு விரியன், நாகப்பாம்பு, கொம்பேறி மூக்கன் என ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் விட்டுள்ளார். அது மட்டுமல்லாது பாம்புகள் பாதுகாப்பு குறித்தும் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார் சந்தோஷ்.
கடந்த மார்ச் 17ஆம் தேதி கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நாகப் பாம்பு ஒன்று வந்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அந்த இடத்திற்கு சென்று சந்தோஷ் பாம்பு பிடிக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக நாகப்பாம்பு சந்தோஷை கடித்துள்ளது.
இதையும் படிங்க: என் சாவுக்கு நீ தான் காரணம்..அங்க மட்டும் போயிடாத என கணவன் கடிதம்!!

அப்போது சம்பவ இடத்திலேயே சந்தோஷ் மயக்கம் அடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டி கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சந்தோஷ் உயிரிழந்துள்ளார். பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு பாம்புகளை பாதுகாத்து வந்த பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழந்த சம்பவம் அனைவரின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

39 வயதான சந்தோசத்திற்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாகவும் அதில் ஒரு குழந்தை மாற்றுத்திறனாளி என்றும் சந்தோசத்தின் வருமானத்தை நம்பியே அவரது குடும்பம் இயங்கி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எப்படியாவது அவர் மீண்டு வந்து விடுவார் என நம்பிய போது உயிரிழந்து விட்டதாகவும் அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: விபத்தில் 1.80 லட்சம் பேர் பலி... ஷாக் கொடுத்த மத்திய அமைச்சர்..!!