மதுரையில் டி. ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியாவை ஆளும் பாஜக ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி. ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பின்பற்றக் கூடிய கட்சியாக பாஜக மாறியிருக்கிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்காக செயல்படும் அரசாக அக்கட்சி திகழ்கிறது. இதன் பின்னணியில் கல்விக் கொள்கையின் பெயரால் இந்தியக் கூட்டாட்சி நெறிமுறைகளைத் தகர்த்து எறிகிற ஓர் அரசாக செயல்படுகிறது. இந்த ஆட்சியிலிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும், மக்களை மீட்டெடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் இடதுசாரி கட்சிகள் ஒன்றுபட்டு செயல்படுகிறோம்.

நாடு காப்பாற்றப்பட வேண்டும் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் மோடி அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழக முதல்வர் மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை உள்ளிட்டவைகளில் ஒரு முன்மாதிரியாக செயல்படுகிறார். இந்திய ஒற்றுமை, மாநில உரிமைகள், தமிழ்நாடு உரிமைகள் காக்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக முதல்வருக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்.

மோடியைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ்ஸின் பிரச்சாரகராகவே பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ஆர்எஸ்எஸ்ஸின் எடுபிடியாகத்தான் இருந்து வருகிறார். ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றது ஒரு பெரிய வியப்புக்குரிய செயல் இல்லை.
பிரதமர் மோடி வெளியில் சுதந்திரமாக இருப்பதாக கூறி வருகிறார். ஆனால், பாஜகவை ஆர்எஸ்எஸ்தான் ஆட்டி வைக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தையே ஏற்றுக் கொள்ளாத ஓர் இயக்கம்தான் ஆர்எஸ்எஸ்.
இதையும் படிங்க: DMK கூட்டணி தான் எப்பவுமே டாப்.. அடித்து சொல்லும் திருமா..!

அமித் ஷா நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி பதவி ஏற்றிருக்கிறார். ஆனால், அவர் அதுபோல் பேசவில்லை. நக்சலைட்டுகள் இல்லாத பாரதம் என்று கூறுகிறார். இன்றைக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் என்ன நடக்கிறது? சத்தீஸ்கர் மாநில மலைப்பகுதியில் வசிக்கக்கூடிய ஆதிவாசிகளை துரத்தி அடித்து விட்டால், அங்கு இருக்கக்கூடிய கனிம வளங்களை எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுத்து விடலாம் என்ற நோக்கத்தில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். உள்துறை அமைச்சராக இருப்பவர் பொறுப்போடு பேச வேண்டும். நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே மதவாத சக்திகளுக்கு எதிராக போராடுபவர்களுக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவிக்கும்” என்று டி.ராஜா கூறினார்.
இதையும் படிங்க: டெல்லியில் செங்கோட்டையன் சந்திப்பு விவகாரம்.. பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சி..?