திண்டுக்கல்லில் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. தொகுதி மறு சீரமைப்பு என்கிற பெயரால் அதை 31ஆக குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் 8 நாடாளுமன்றத் தொகுதிகளை தமிழகம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி எண்ணிக்கை என்பது சட்டரீதியாக சரியாக இருக்கலாம். ஆனால், மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிறது.

அதனால், மக்கள் தொகையைக் குறைக்கவேண்டும் எனப் பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசு, இந்த திட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்தியது. இதனால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் மக்கள் தொகை குறைவாக இருக்கிறது. ஆனால், அந்தக் குறைவை காரணம் காட்டி தமிழகத்தில் 8 நாடாளுமன்றத் தொகுதியை பறிப்பது என்பது தமிழகத்தின் உரிமையைப் பறிக்கக் கூடிய செயல்.
இதையும் படிங்க: இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம்... தி.க.துணைத்தலைவர் மீதான வழக்கு ரத்து செல்லும்..
மத்திய அரசு செய்யக் கூடிய தவறுகளை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்துவதில் எல்லோரையும்விட தமிழக எம்.பி.க்கள் முன்னிலையில் உள்ளனர்,முன்மாதிரியாகவும் உள்ளனர். ஆகவே. குரலை ஒடுக்க வேண்டும் என்பதற்காக தொகுதி எண்ணிக்கையைக் குறைப்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் மார்ச் 5ஆம் தேதி கூட்டத்துக்கு தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். இது வரவேற்றகத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் கலந்துகொண்டு மத்திய அரசின் தவறான முடிவுக்கு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். அந்தக் கூட்டத்தில் எடுக்கிற முடிவுகளை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்தப் பிரச்சினையைக் கவனத்தில் கொண்டு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறது” என்று முத்தரசன் கூறினார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விஷ சாராயவழக்கு குற்றவாளிகள்... ஜாமின் மனுக்கள் தள்ளுபடி- உயர்நீதிமன்றம் ..