மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர்.. ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!
விருதுநகர் அருகே கோயில் திருவிழாவில் சீரியல் லைட் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி உட்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உயிர் இழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே காரிசேரி மாரியம்மன் கோவிலில் கடந்த 45 நாட்களுக்கு முன்னர் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை அடுத்து நேற்று 45வது நாள் மண்டல பூஜைக்காக கிராமத்தில் மைக் செட் மற்றும் சீரியல் லைட் அமைக்கும் பணி நடைபெற்றது. மைக் செட் அமைக்கும் பணியில் அதே ஊரை சேர்ந்த திருப்பதி ஈடுபட்டிருந்தார்.
சீரியல் லைட் அமைத்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பி மீது சீரியல் லைட் வயர் உரசி அதிலிருந்து ஏற்பட்ட மின் கசிவினால் மைக்செட் உரிமையாளர் திருப்பதி (வயது 28) மீது மின்சாரம் பாய்ந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி லலிதா (வயது 25) திருப்பதியின் பாட்டி பாக்கியம்(வயது 65) உள்ளிட்ட 5 பேர் அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது 5 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் திருப்பதி, அவரது மனைவி லலிதா, மற்றும் பாட்டி பாக்கியம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் உயிரிழந்த தம்பதிக்கு 2 1/2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் லலிதா தற்போது 7 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது. மேலும் திருப்பதியை காப்பாற்ற முயன்ற அவரது உடன் பிறந்த சகோதரர் தர்மர் (வயது 20) மற்றும் உறவினர் கவின்குமார் (வயது 17)ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வரலாற்றிலேயே முதல் முறை.. நாளை மறுநாள் தரமான சம்பவம் செய்யப்போகும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் காரிசேரி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமம், வடக்குத் தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் மறுபூஜைக்காக நேற்று மாலை சுமார் 3.10 மணியளவில் ரேடியோ அமைக்கும் பணியின் போது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் வயரின் மீது மின்சார வயர் பட்டதில் ரேடியோ அமைக்கும் பணியை மேற்கொண்ட காரிசேரி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி (27) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேற்படி சம்பவம் இறந்த திருப்பதி வீட்டிற்கு அருகில் நிகழ்ந்ததால் அவருடைய மனைவி லலிதா (25) மற்றும் பாட்டி பாக்கியம் (75) ஆகியோர் திருப்பதி என்பவரை காப்பாற்ற முயன்றபோது அவர்களும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொசுக்குன்னு கடம்பூர் ராஜு இப்படி சொல்லிட்டாரே... அப்செட்டில் அதிமுக; கொண்டாடும் திமுக!