வழிப்பறியில் ஈடுபட்ட கவுன்சிலர்.. ஆந்திராவில் தங்க பிஸ்கட்கள் அபேஸ்.. போலீசார் அதிரடியால் 4 பேர் கைது..!
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் கவுன்சிலர் ஒருவர் வழிபறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.கோட்டா பகுதியை சேர்ந்தவர் தங்க நகை வியாபாரியான சேட்டன் குமார். இவர் வி.கோட்டா பகுதியில் இருந்து மூன்றரை கிலோ எடையுள்ள ஐந்து தங்க பிஸ்கட்டுகளை விற்பனை செய்ய பேரணாம்பட்டுக்கு கடந்த 2 ம் தேதி இரவு தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.
இதை அறிந்த கொள்ளை கும்பல் ஒன்று அவருடைய காரை வழிமறித்தது. அந்த கும்பல் சேட்டன் குமாரை மிரட்டி, அவர் வைத்திருந்த தங்க பிஸ்கட்களை கொள்ளையடித்து தப்பி சென்றது. இந்த வழிப்பறி கொள்ளை சம்பவம் தொடர்பாக மூன்றாம் தேதி காலை தீபக் குமார் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள விகோட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஐந்து தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். சேட்டன் குமார் அளித்த அடையாளங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை ஓரளவு போலீசார் அடையாளம் படுத்தி வைத்து இருந்தனர். அப்போது தங்க பிஸ்கட்டுகளை கொள்ளையடித்து தப்பி சென்றவர்கள் வி.கோட்டா பகுதியில் காரில் சுற்றிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் வி.கோட்டா அருகே உள்ள ராகவ பள்ளி பகுதியில் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: வேறு ஒருவருடன் சேட்டிங்.. ஆத்திரத்தில் காதலி குத்திக்கொலை.. தலைமறைவான காதலன் சிக்கியது எப்படி..?
அப்போது வேகமாக வந்த இன்னோவா கார் ஒன்றை தடுத்து நிறுத்திய போலீசார், அதனை சோதனை செய்த போது அதில் இருந்த ஜெயபால், முகரம், பாபு, சண்முகம் ஆகியோர் வேறு சிலர் உதவியுடன் தங்க பிஸ்கட்டைகளை கொள்ளையடித்து காரில் சுற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஐந்து தங்க பிஸ்கட்டுகளை கைப்பற்றினர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
விசாரணையின் போது ஏ ஒன் குற்றவாளி கோலார் நான்காவது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ஜெயபால் என போலீசாருக்கு தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. நகை வியாபாரியான சேட்டன் குமார், சென்னையை சேர்ந்த சேட்டு ஒருவரிடம் இருந்து தங்க கட்டிகளை வாங்கி வருவது தொடர்பான தகவல் அந்த சேட்டுவின் கார் டிரைவர் ஆன ஏ.2 குற்றவாளி முகரம் மூலம் ஜெயபாலுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மேலும் சிலருடன் சேர்ந்து சேட்டன் குமார் பயணித்த காரை வழி மறித்து அவர் வைத்திருந்த தங்க பிஸ்கட்டுகளை கொள்ளையடித்துச் சென்றதாக ஜெயபால் விசாரணையில் தெரிவித்தார்.
இந்த கொள்ளையில் பேரணாம்பட்டை சேர்ந்த மேலும் 9 பேர் கலந்து கொண்டனர் என்று அப்போது கூறினார். அந்த ஒன்பது பேரும் தப்பி ஓடி தலை மறைவாக இருக்கும் நிலையில் அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என சித்தூர் மாவட்ட எஸ்.பி. மணிகண்டா தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியில் உள்ள ஒருவர் இதுபோன்ற வழிபறி சம்பவங்களில் ஈடுபட்டதும், கொள்ளைக்கு டிரைவரே பிளான் போட்டு கொடுத்ததும் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மாணவிகளிடம் அத்துமீறிய தலைமையாசிரியர்.. ஹோலி பண்டிகையில் இப்படியா? கண்ட இடத்தில் கலர் பூசி அட்டூழியம்..!