தக்காளி கூடையில் ஜெலட்டின் குச்சிகள்.. 4,700 கிலோ வெடி மருந்து பறிமுதல்... மொத்தமாக வெடித்தால் ஊரே காலி..!
சேலத்தில் இருந்து கேரளாவிற்கு தக்காளி கூடையில் மறைத்து ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடி மருந்துகள் சுமார் 4700 கிலோ வெடி மருந்துகளை கடத்திய ஏழு பேரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஆவாரங்காடு பேருந்து நிறுத்தம் உள்ளது. அப்பகுதியில் குமாரபாளையம் ஆய்வாளர் தவமணி, போலீசாருடன் வாகன தனிக்கை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த ஈச்சர் லாரி ஒன்றை நிறுத்தி, போலீசார் ஆவணங்களை கேட்டனர். ஆவணங்களை வண்டியில் வைத்திருப்பதாகவும், அதை எடுத்து கொண்டு வருவதாகவும் லாரி அருகே சென்ற டிரைவர், போலீசாருக்கு போக்கு காட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் சிலர் துரத்தி சென்றனர். லாரியில் ஏதோ கடத்தல் பொருள் இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் வந்தது.
இதனை அடுத்து போலீசார் வாகனத்தை ஆய்வு செய்தனர். அப்பொழுது ஈச்சர் லாரியில் தக்காளிக்கு கூடைகளுக்கு இடையே சுமார் 4 700 கிலோ எடை கொண்ட ஜலட்டின் குச்சிகள் மற்றும் வெடி பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார், வெடிபொருள் துறை நிபுணர்களுக்கு தகவல் அளித்து வரவழைத்தனர். பின்னர் அவற்றை பாதுகாப்பாக பரமத்தி வேலூர் அருகே உள்ள இருகூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் வெடி மருந்து கிடங்கில் பாதுகாப்பாக மாற்றினர். அதன் பின்னர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர். தீவிரவாதிகளின் சதித்திட்டமாக இருக்குமோ என ஆய்வு செய்தனர். எனினும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் வீடுகளில் ED RAID..!
எவ்வித தகவல்களும் கிடைக்காத பட்சத்தில் லாரியின் உரிமையாளரான, ஈரோடு மாவட்டம் சித்தோடு சேர்ந்த பார்த்திபனை போலீசார் வலை வீசி தேடினர். அவனின் தொலைபேசி எண் மூலம் ட்ராக் செய்து தேடி பிடித்தனர். இதனை அடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சார்ந்த கிணறு வெட்டும் தொழிலாளர்கள் மற்றும் வெடி மருந்து விற்பனையாளர் ஆகியோரிடம் வெடி பொருட்களை பெற்றுக் கொண்டது தெரிந்தது. அவற்றை கேரள மாநிலத்திற்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பதாகவும் பார்த்திபன் ஒப்புக் கொண்டார்.
இதனை அடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பார்த்திபனுக்கு வெடி மருந்து பொருட்களைப் சப்ளை செய்ததாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி சேலம் மாவட்ட பகுதிகளைச் சார்ந்த வெடி மருந்து ஒப்பந்ததாரர் கிருபாகரன், ராஜேந்திரன், சுருளிராஜன், அப்துல் லத்தீப், பழனிச்சாமி, ராமலிங்கம் ஆகியோரை திருச்செங்கோடு காவல்துனை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட குமாரபாளையம் போலீசார் ஈச்சர் லாரியை பரிமுதல் செய்ததுடன் குற்றவாளிகள் 7 நபர்களையும் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர் குமாரபாளையம் பகுதியில் சுமார் 4700 கிலோ வெடி மருந்து பொருட்களை கடத்த முயற்சி செய்த நபர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவே இல்லை.. ஸ்டாலின் ஆக்ஷனுக்கு சந்திரபாபு ரியாக்ஷன்.!