அம்மாவை.. அப்பா இப்படி தான் கொன்னாரு! பிஞ்சு குழந்தை வரைந்த ஓவியத்தால் சிக்கிய தந்தை.. தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்..
உத்தரபிரதேசத்தில் 27 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் கணவர் அவரை அடித்து கொலை செய்தது அவர்களது குழந்தை வரைந்த ஓவியத்தால் தெரியவந்துள்ளது
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி, கோட்வாலி பகுதிக்கு உட்பட்ட பஞ்சவதி ஷிவ் பரிவார் காலனியை சேர்ந்தவர்கள் சந்தீப் - சோனாலி தம்பதி. சந்தீப் மெடிக்கல் ரெப்பாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தர்ஷிதா என்கிற 4 வயது மகளும் உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சோனாலிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கூறி அவரது கணவர் சந்தீப், ஜான்சி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது கொலையாக இருக்கலாம் எனவும் சோனாலியின் தந்தை திரிபாதி, போலீசில் புகாரளித்தார்.
அப்போது தான் பல திடுக்கிடும் விஷயங்கள் வெளிவர துவங்கியது. 2019ல் சந்தீப் - சோனாலிக்கு திருமணம் நடந்தது. திருமண நாளில் நான் அவர்களுக்கு வரதட்சணையாக ரூ.20 லட்சம் ரொக்கமாகக் கொடுத்தேன். ஆனால் சில நாட்களில், அவர்கள் ஒரு கார் வாங்கி தரும்படி கேட்கத் தொடங்கினர். நான் அதற்கு பணம் செலுத்த முடியாது என்று சொன்னதும், அவர்கள் என் மகளைத் தாக்கத் தொடங்கினர் என அழுதபடி தெரிவித்தார் திரிபாதி. இதுகுறித்து நான் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்ததும் இனி இப்படி நடக்காது என்றும் கூறி சமாதானம் பேசினர். அதனால் நான் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டேன் என்றார். ஆனால் பிரச்னை அதோடு முடியவில்லை. சிலநாட்களில் கர்ப்பமான சோனாலி, தர்ஷிதாவை பெற்றெடுத்தார். ஆனால் ஆண் குழந்தையை பெற்றெடுக்க துப்பில்லாதவள் என அவரது மாமியார் வினீதா தொடர்ந்து இழிவாக பேசி வந்துள்ளார்.
இதையும் படிங்க: கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி..! தகாத உறவால் ஆத்திரம்!
பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததால் என் மகளை அப்பிடியே மருத்துவமனையில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். நான்தான் அனைத்து பில்களையும் செட்டில் செய்து எனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்தேன். சில மாதங்கள் கழித்துதான் சந்தீப் வந்து எனது மகளை அழைத்து சென்றார் என மாமனார் திரிபாதி போலீசில் தெரிவித்துள்ளார். இதனால் போலீஸுக்கு இது கொலையாக இருக்குமோ என சந்தேகம் எழுந்தது. குழந்தை தர்ஷீதாவிடம் லேசாக பேச்சு கொடுத்துள்ளனர். அப்போது தர்ஷிதா மழலை மொழியில் தனது தாய்க்கு நேர்ந்த கொடூரத்தை சொல்லியது மட்டுமல்லாமல் அதை வரைந்தும் காட்டி இருக்கிறாள்.
அப்பா ஒரு குச்சியால் அம்மாவை அடிச்சாரு. பாட்டி அம்மாவை மாடியில இருந்து கீழ தள்ளிவிட்டாங்க.. எங்கம்மா அடிக்காதீங்கனு நான் சண்டை போட்டேன். எதிர்த்து பேசுனா உனக்கு இதே நிலமை தான்னு என் வாய பொத்துனாங்க.. அப்புறம் அப்பா ஒரு கல்லால அம்மா மண்டையில அடிச்சாரு. கழுத்தை நெறிச்சாரு. அப்புறம் கழுத்துல கயிறை மாட்டி தொங்கவிட்டாரு.. அப்புறம் அம்மாவ கீழ இறக்கி எங்கயோ எடுத்துட்டு போனாங்க என குழந்தை தர்ஷிதா, தன் தாய்க்கு நடந்த அத்தனை கொடுமைகளையும் படமாக வரைந்து காமித்தாள்..
இதையடுத்து சந்தீப், அவரது தாய் வினீதா, அவரது மூத்த சகோதரர் கிருஷ்ண குமார், அவரது அண்ணி மனிஷா ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, கொலை, பெண்ணுக்கு எதிரான கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜான்சி போலீசார் வழக்குபதிவு செய்தனர். சந்தீப்பை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தைப்பூசம் நாளில் பழனியில் நடந்த பகீர் சம்பவம்... பெண்ணுக்கு நடந்த கோரம்...!