ரூ.1 கோடி மதிப்பிலான வைரக்கல்.. வியாபாரியை மிரட்டி கொள்ளையடித்த கும்பல்.. 'சதுரங்க வேட்டை’ சினிமாவை மிஞ்சும் திட்டம்..!
ராமநாதபுரத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான ராசி வைரக்கல் பறிமுதல் செய்த ஏழு பேரை ராமநாதபுரம் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், கச்சைகட்டி பெருமாள் நகரைச் சோ்ந்தவா் ராசிக்கல் வியாபாரி முனியசாமி. இவர் கடந்த 30 வருடங்களாக விலை உயா்ந்த கற்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவா் தன்னிடம் விலை மதிப்புமிக்க 7 கிராம் அலெக்ஸ்சாண்டா் என்ற வைரக் கல் விற்பனைக்கு உள்ளதாக சிவகாசியைச் சோ்ந்த தரகா் ஜாகீரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நெல்லையை சோ்ந்த ரவியை முனியசாமிக்கு ஜாகீா் அறிமுகப்படுத்தினாா். இவர் மூலம் அந்த விலைமதிப்பற்ற வைரக்கல்லை விற்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே முனியசாமியிடம் வைரக்கல் இருப்பதை அறிந்த ஒரு கும்பல் அவரை தொடர்பு கொண்டு பேசியது.
முனியசாமி சொல்லும் விலைக்கே வாங்கி கொள்வதாகவும், தங்களுக்கு ஃபாரினில் கஸ்டமர்ஸ் இருப்பதாகவும் கதை அளந்துள்ளனர். அதிக லாபம் கிடைக்கும் என்பதால், அவர்களின் திட்டத்திற்கு முனியசாமி ஒப்புக்கொண்டார். பின்னர் முனியசாமியை தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்த அபுதாகிா் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். முனியசாமியிடம் தொடா்பு கொண்டு வைரக் கல்லை வாங்குவதாகக் கூறிய அபுதாகிர், அவரை ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ரயில்வே கடவுப் பாதைக்கு வருமாறு கூறி உள்ளார்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை.. கைவிட்ட காதலர்கள்.. தேடிப்பிடித்து குழந்தையை ஒப்படைத்த போலீசார்..!
அவர்களின் சதித்திட்ட்த்தை அறியாத முனியசாமி, இதை நம்பி அங்கு சென்றபோது, அங்கு 7 போ் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் முனியசாமியை சுற்றி வளைத்துள்ளனர். ஆயுதங்களைக் காட்டி, முனியசாமியிடமிருந்த ரூ. 1கோடி மதிப்பிலான அலெக்ஸாண்டா் வைரக் கல், ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முனியசாமி இது குறித்து கடந்த ஜனவரி 24-ஆம் தேதி ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் க.பொன்தேவி தலைமையில் 11 போ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். பெரியகுளம் பகுதியை சோ்ந்த அபுதாஹிா், இளையான்குடியை சோ்ந்த முகமது அசாருதீன் (வயது 39), முகமது நவுபால், தூத்துக்குடியைச் சோ்ந்த முத்துச்செல்வம், கனகராஜ் (வயது 25), மற்றொரு கனகராஜ் (வயது 24), ராஜா ஜோஸ்குமாா் ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து அலெக்சாண்டா் வைரக் கல், ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணம், கைப்பேசி ஆகியவற்றை கைப்பற்றினா். கைப்பற்றப்பட்ட வைரக்கல் உள்ளிட்டவற்றை ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் தனிப்படை போலீஸாா் காட்சிப்படுத்தினா். அப்போது, குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் பாராட்டினாா்.
இதையும் படிங்க: சவாரி ஏற்றுவதில் மோதல்.. கத்தியுடன் சுற்றித்திரிந்த ஆட்டோ டிரைவர்கள்.. 9 பேர் கைது, 4 பேருக்கு மாவுக்கட்டு..!