சென்னையில் தொடரும் அவலம்.. மீண்டும் ஒருவரை கடித்த ராட்வீலர்.. என்னாச்சு மாநகராட்சி உத்தரவு?
சென்னையில் மீண்டும் ஒருவரை ராட்வீலர் நாய் கடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலங்களாக தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் மூலம் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெருநாய்கள் நடந்து செல்வோரை துரத்துவதும் கடிப்பதும் அதிகரித்து வருகிறது. சிறுவர் சிறுமிகளும் இதில் பாதிக்கப்படுகினறனர். இதுஒருபுறம் என்றால் மறுபுறம் வளர்ப்பு நாய்களும் உரிமையாளரின் பேச்சை கேட்காமல் சாலை வாக்கிங் செல்லும் போது பொதுமக்களை கடித்து விடுகின்றன. சில நேரங்களில் ஆக்ரோஷமான நாய்கள் கடிக்க தொடங்கினால் அதனை உரிமையாளரே தடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டில் 3.19 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். 19 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்தனர். இதுவே கடந்த 2024 ஆம் ஆண்டில் 4.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர்.
43 பேர் ரேபிஸால் உயிரிழந்தனர். 2025 ஆம் ஆண்டை பொறுத்தவரை கடந்த ஜனவரி முதல் தற்போதுவரை சுமார் 1.50 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 3 பேர் ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழந்தனர். மறுபக்கம் வளர்ப்பு நாய்களினால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகளவு உள்ளது. கடந்த ஆண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் தலையை வளர்ப்பு நாய் கடித்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறினார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனால் 23 வகை நாய்களுக்கு இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யவும் அரசு தடை விதித்திருந்தது.
இதையும் படிங்க: வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம்.. மீறினால் அபராதம்.. மாநகராட்சியின் ஸ்ட்ரீட் ரூல்ஸ்..!
அதில் பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா. டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் ஆகிய நாய் இனங்கள் மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் என்பதால் 23 வகை நாய் இனங்களை இனப்பெருக்கம் செய்வதை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மறுபுறம் இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக வளர்ப்பு நாய்களை வெளியில் அழைத்து வரும்போது நாய்களுக்கு வாய் கவசம் அணிவிக்க வேண்டும் என்றும் வாய்கவசம் அணிவிக்க தவறினால் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மீண்டும் ஒருவரை ராட்வீலர் நாய் கடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியில் கவியரசன் என்ற வழக்கறிஞர் ராட்வீலர் வகை நாயை வளர்த்து வருகிறார். அவர் தனது நாயை வாக்கிங் அழைத்து செல்லும் போது வாய் பகுதியை கட்டாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் மாரியப்பன் என்பவர் கவியரசனிடம் நாயை பாதுகாப்பாக அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் அந்த முதியவருக்கும் கவியரசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது முதியவரை அவரது மனைவியின் முன்னிலையில் தன் ராட்வீலர் நாயை வைத்து கடிக்க வைத்துள்ளார். அந்த நாய் மாரியப்பனின் வேட்டியை இழுத்து உருவி அவரை நிர்வாணமாக துரத்தி கடித்துள்ளது.வயதான தம்பதி இருவர் மீதும் ஏறி கடித்துள்ளது. இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தட்டி கேட்டுள்ளார். கவியரசன் அவரையும் தன் நாயை வைத்து கடிக்க வைத்துள்ளார். மக்கள் ஒன்றுகூடி தட்டி கேட்டபோதும் கவியரசன் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ரமேஷ் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் கவியரசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நாய்களின் உடலில் மைக்ரோ சிப்... தீவிரம் காட்டும் மாநகராட்சி.. ஏன் தெரியுமா..?