×
 

புடவைகளுக்கு சாயமிடுவதில் நஷ்டம்.. யூடியூப் பார்த்து கள்ளநோட்டு தயாரித்த கும்பல்..! கொத்தாக தூக்கிய போலீஸ்..!  

ஆந்திராவில் யூடியூப் பார்த்து கள்ளநோட்டு தயாரித்த 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் பழைய குண்டூரில் உள்ள பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கர்ரி மணிகுமார். பல ஆண்டுகளாக புடவைகளுக்கு சாயமிடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சாயமிடுதலில் மிகவும் அனுபவம் பெற்றவர். கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தொழில் தொய்வு ஏற்பட்டது. இதனால் தொடர் இழப்புகள், கடும் பண நெருக்கடியில் சிக்கிய கர்ரி மணிக்குமார், தனக்கு தெரிந்த சாயமிடுதல், பிரிண்டிங் வைத்து வேறு என்ன தொழில் செய்வது என்ன யோசித்தார். பணம் தானே பிரச்னை, நம்மிடம் உள்ள சாயங்களை வைத்து நாமே ஏன் பணம் அச்சிடக்கூடாது என யோசித்த கர்ரி மணிக்குமார், கள்ள நோட்டுகளை தயாரிப்பதில்  கவனம் செலுத்தி உள்ளார். ​​இதற்காக யூடியூப்பில் பல வீடியோக்களை பார்த்துள்ளார்.

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த டோனேபுடியைச் சேர்ந்த மது என்பருடன் சேர்ந்து ஒரு பிரிண்டர், லேமினேஷன் இயந்திரம் மற்றும் பிற உபகரணங்களை வாங்கிய கர்ரி மணிகுமார், தனக்கு சொந்தமான இடத்திலேயே கள்ள நோட்டுகளை அச்சிடும் முயற்சியில் ஈடுபட்டார். ஏற்கனவே சாயமிடுதலில் வண்ணங்களை எவ்வாறு கலக்குவது என தெரிந்து வைத்திருந்த அவர், சீக்கிரமாகவே கள்ள நோட்டுகளை அச்சிடத் தொடங்கினார். 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் என எளிதில் கள்ள நோட்டுகளை அச்சிட்டார். கள்ள நோட்டுகள் புதுசாக தோற்றமளிப்பதால் அதன்மீது சந்தேகம் வராமல் இருக்க கள்ள நோட்டு கட்டுகளை சுற்றிக் கட்டுவதற்கு எஸ்.பி.ஐ. வங்கியின் பெயர் அச்சிடப்பட்ட சீல் நாடாக்களை உருவாக்கி, அதனை கொண்டு பணக்கட்டுகளை கட்டியுள்ளார். வங்கியில் இருந்து வாங்கி வந்த புதிய நோட்டுகளை போல கட்டி யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தயார் செய்தார்.

இதையும் படிங்க: மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய்: சாக்கு பைகளில் கட்டி கால்வாயில் வீச்சு

இனி கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட வேண்டும் என யோசித்த மணிக்குமார், மது ஆகிய இருவரும், காக்கிநாடா மாவட்டம் கஜுலூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சீகட்லா எடுகொண்டலு மற்றும் சித்துரி ஹரிபாபுவு ஆகியோரை கூட்டு சேர்த்துக்கொண்டனர். இவர்கள் ரூ.1 லட்சம்  ரொக்கத்திற்கு ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகளை தருவதாகக் கூறி, இந்த நோட்டுகளை புழகக்த்தில் விட்டுள்ளனர். சிறு வியாபாரிகள், நெரிசலான கடைகள், வார சந்தைகள் போன்ற இடங்களில் கள்ள நோட்டுகளை மாற்றி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி ஹரிபாபு, தனது காரை பழுதுபார்க்க பிக்கவோலுவைச் சேர்ந்த பல்லி ராம்பாபுவிடம் எடுத்து சென்றுள்ளார். அங்கு முன்பணமாக நான்கு ரூ.500 கள்ள நோட்டுகளைக் கொடுத்தார்.  அதை எடுத்துக்கொண்டு உதிரி பாகங்கள் வாங்க சென்ற ராம்பாபு, அது கள்ள நோட்டுகள் என்பதை கண்டுபிடித்து உடனடியாக பிக்கவோலு போலீசில் புகார் அளித்தார். எஸ்.பி நரசிம்ம கிஷோர் மற்றும் கிழக்கு மண்டல டிஎஸ்பி பி. வித்யா தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணையை துவங்கினர். 

போலீசாரின் விசாரணையில் மணிகுமார் மற்றும் டோனேபுடி மது ஆகியோர் குண்டூரில் குடிசைத் தொழில் போல கள்ள நோட்டுகளைத் தயாரித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. சித்துரி ஹரிபாபுவுடன், ஸ்ரீனிவாஸ், சீகட்லா எடுகொண்டலு ஆகியோர் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து குற்றவாளிகளையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 1.6 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். 9,680 ரூபாய் ரொக்கம், ஒரு கார், 5 செல்போன்கள் மற்றும் கள்ளநோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.


 

இதையும் படிங்க: 25-என பொய் சொன்ன 38! 17 வயது கல்லூரி மாணவிக்கு காதல் வலை.. போக்சோவில் தட்டிதூக்கிய போலீஸ்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share