×
 

ஆவடி இரட்டை கொலை வழக்கு.. தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்.. கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!

ஆவடியில் வயது முதிர்ந்த தம்பதி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள சேக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகதீசன் (வயது 67) - விலாசினி (வயது 58) தம்பதி. சென்னையில் உள்ள தமிழக அரசின் அச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இந்த தம்பதி, சேக்காடு - பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்களது பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 28), தன் மனைவி பூவலட்சுமி (வயது 22) மற்றும் 3 வயது மகன் ஆகியோருடன் கடந்த 2018-ம் ஆண்டில் ஜெகதீசனின் பண்ணை வீட்டின் அவுட் ஹவுஸில் தங்கி, பண்ணை வீட்டின் தோட்ட வேலைகளை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி அன்று வெளிநாட்டில் உள்ள இவர்களது பிள்ளைகள் பலமுறை போன் செய்தும், பெற்றோர் போன் எடுக்காததால் போலீசாருக்கு தகவல் சொல்லி உள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்த போது, முதிய தம்பதி அடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

இது குறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். தம்பதிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். அப்போது அந்த வீட்டில் பணிபுரிந்து வந்த கணவன், மனைவி இருவரும் தலைமறைவானது தெரியவந்தது.

இதையும் படிங்க: ஆளில்லா நேரத்தில் அத்துமீற முயற்சி.. தாய், குழந்தையை கொன்ற காமுகனுக்கு 15 ஆண்டு கடுங்காவல்..!

இதையடுத்து ஆவடி போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாகப்பட்டினத்தில் தலைமறைவாக இருந்த சுரேஷ்குமார்(என்ற) தாணு சுரேஷ்(வயது 28), அவரது மனைவி பூவலட்சுமி(22) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பண்ணை வீட்டில் தம்பதிகள் தனியாக இருப்பதை அறிந்து நகை பணத்திற்கு ஆசைப்பட்டு இருவரையும் அடித்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. மேலும் சுரேஷ்குமார் மீது பல்வேறு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகள் இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3ல் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலமுருகன் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின் போது, உடல்நலக்குறைவால் பூவலட்சுமி உயிரிழந்துவிட்டார். இதனால், அவருக்கு எதிரான வழக்கு நீக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு விசாரணை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதில், சுரேஷ்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ன் நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு அளித்தார். அதில், ஜெகதீசன், விலாசினி ஆகிய இருவரை கொலை செய்த குற்றத்துக்காக, சுரேஷ்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை கட்டத் தவறினால், 6 மாதங்கள் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோட்டூர்புரம் இரட்டை கொலை வழக்கு.. 12 பேர் கைது.. 3 பேருக்கு மாவுக்கட்டு.. சேலத்தில் பதுங்கியவர்களை தட்டிதூக்கிய போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share