அல்லக்கை, வாடா, போடா ஒருமையில் உதயநிதி ஸ்டாலினை பேசிய அண்ணாமலை...அதிர்ச்சியில் பாஜகவினர்
பிரதமர் மோடியை ’கெட் அவுட் மோடி’ என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசியதற்கு பதிலடி தரும் வகையில் ஆவேசமாக பேசிய அண்ணாமலை ஓர் கட்டத்தில் வாடா, போடா, அல்லக்கை, பாலிடாயில் என்றெல்லாம் தனிப்பட்ட தாக்குதலை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் ஒரு முக்கியமான சரத்தாக மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு வைத்துள்ளது. இதில் தமிழ். ஆங்கிலம் இரண்டு மொழிகள் தவிர மூன்றாவது ஆக ஆப்ஷனல் லாங்கக்வேஜ் என்கிற வகையில் ஏதாவது ஒரு தொடர்பு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை திமுக மற்றும் தமிழகத்தில் உள்ள கட்சிகள் மிக அழகாக மடைமாற்றம் செய்து மத்திய அரசு இந்தியை திணிப்பதாக பிரச்சாரம் செய்து அதற்கான எதிர்ப்பு கூட்டத்தையும் நடத்தினர்.
இந்த கூட்டத்தில் திமுகவின் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒரே குரலில் பாஜக இந்தியை திணிக்கிறது என்கிற ரீதியில் பேசியதை காண முடிந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் பொழுது, ”தமிழ்நாட்டு குழந்தைகளின் கல்வி கல்விக்கான நிதி உரிமை கேட்டு இன்றைக்கு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி இருக்கிறோம். நிதி வழங்கவில்லை என்றால் தலைவரின் அனுமதியுடன் சொல்கிறேன் விரைவில் மிகப்பெரிய போராட்ட களமாக இது மாறும். இன்றைக்கு சென்னையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம். விரைவில் தமிழ்நாடு தழுவிய போராட்டமாக மாறுவதும், மாறாததும் பாசிச பாஜக அரசின் கைகளில் இருக்கிறது.
இதையும் படிங்க: அன்பில் மகேஷ் அமைச்சராக தொடரக்கூடாது... அண்ணாமலை அதிரடி...!
ஒன்றிய பிரதமர் மோடி அவர்களே சென்ற முறை நீங்கள் தமிழர்களின் உரிமைகள் எல்லாம் பறிக்க முயற்சித்த போது தமிழ்நாட்டின் மக்கள் உங்களை ’கோபேக் மோடி’ என்று சொல்லி துரத்தி அடித்தார்கள். மீண்டும் அதை தமிழ்நாட்டு மக்களிடம் முயற்சி செய்தீர்கள் என்றால் இந்த முறை ’கோ பேக் மோடி’ கிடையாது ’கெட் அவுட் மோடி’ என்று சொல்லி உங்களை தமிழர்கள் துரத்துவார்கள்” என்று பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கரூரில் அண்ணாமலை மிக ஆவேசமாக தனிப்பட்ட முறையில் தாக்குதலை உதயநிதி ஸ்டாலின் மீது நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, சாதாரணமாக பேச ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து பேச நீங்க யார்? உலகம் போற்றும் தலைவரை விமர்சிப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்கிற ரீதியில் ஆரம்பித்தார் அண்ணாமலை. பின்னர் ஆவேசமாக அவர் பேச ஆரம்பித்தார், அவர் பேசியதாவது, “சொந்த ஊரை தாண்டினால் யார் என்றே தெரியாதவர்கள் நான்கு அல்லகைகளை வைத்துக்கொண்டு அண்ணன் வரார் அண்ணன் வரார் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு அவர்கள் சொன்னால்தான் அண்ணன் வருவது தெரியும். இந்த அல்ல கைகள், ஐயா இப்பொழுது நான் திமுக ஸ்டைலுக்கு மாறிட்டேன் என்ன தப்பா நினைச்சுக்காதீங்க, இந்த அல்ல கைகள் பிரதமர் மோடியை பார்த்து குற்றம் சொல்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார், மோடி மட்டும் தமிழ்நாட்டுக்கு வந்தார் என்றால் முதலில் நாங்கள் ’கோ பேக் மோடி’ என்று சொன்னோம், இனி ’கெட் அவுட் மோடி’ என்று சொல்வோம். உதயநிதி ஸ்டாலினுக்கு நாங்கள் சொல்கிறோம் நீ சரியான ஆளா இருந்தா, சரியான ஆளாக நீ இருந்தாய் என்றால், உன் வாயிலிருந்து ’கெட் அவுட் மோடி’ன்னு நீ சொல்லி பாரு, நீ சொல்லிப்பார். இல்லல்ல எங்கப்பா முதலமைச்சர், எங்க தாத்தா ஐந்து முறை முதலமைச்சர் நீ சொல்லி பார்றா பார்ப்போம். எங்க தாத்தா ஐந்து முறை முதலமைச்சர், என் அப்பா சிட்டிங் முதலமைச்சர், நான் சிட்டிங் துணை முதலமைச்சர் என்று சொல்லுடா பாப்போம். சொல்லு நீ.
2 நாள் முன்னாடி நீ என்ன சொன்னாய் ’கெட் அவுட் மோடி’ ’வெளியே போடா மோடி’ன்னு சொல்வாராம். உன் வீட்டுக்கு வெளியில் வந்து ,பால்டாயில் பாபு, என்று போஸ்டர் ஓட்டிட்டு வருவோம். நீ சொல்லுகின்ற அதே பாஷையில் நான் பேசுவேன். உனக்கு ஒரு உலக தலைவரை மதிக்க தெரியல, நீ கத்துகுட்டி, காலையில் 11-30 மணிக்கு தான் உன் மேல் வெயிலே படும்.
நீ சூரியனை பார்த்ததே கிடையாது சூரியன் மேலே வந்ததுதான் நீ பார்த்திருக்கிறாய். அதிகாலை 3.30 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து யோகா செய்து 5 மணிக்கு ஃபைல் பார்த்து ஆட்சி செய்கிற ஆள் கிட்ட 11 மணிக்கு எழுந்து நட்ட நடுவுல சூரியன பாக்குற உனக்கே இவ்வளவு திமிர் இருந்தால், நடுத்தர மக்களுக்கு நாட்டை உருவாக்கும் மக்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்” இவ்வாறு அண்ணாமலை ஆவேசமாக பேசினார்.
அண்ணாமலை வழக்கமாக மரியாதையுடன் பேசக்கூடியவர். ஆனால் பிரதமர் மோடியை ’கெட் அவுட் மோடி’ என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதை வைத்து, அண்ணாமலை மரியாதை குறைவாக மேடையில் உதயநிதி ஸ்டாலினை பேசியதை காண முடிந்தது. வாடா, போடா என்ற ரீதியில் ஒரு மாநில தலைவர், துணை முதல்வரை பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மிகவும் மதிக்கத்தக்கவர் தான் ஆனால் ’கோ பேக் மோடி’ என்று சொல்வதும் ’கெட் அவுட் மோடி’ என்று சொல்வதும் அவரவர் கட்சியின் உரிமை.
அதற்காக உணர்ச்சி வசப்பட்டு துணை முதல்வரை வாடா, போடா என்றெல்லாம் பேசுவது ஒரு கட்சியின் மாநில தலைவருக்கு அழகா? மேடைப் பேச்சுக்கு வேண்டுமானால் உணர்ச்சிகரமாக கைதட்டுவதற்கும், உச்சரிப்பதற்கும் சரியாக இருக்கும். ஆனால் ஒரு தலைவரின் பேச்சாக இதை யாரும் ரசிக்க மாட்டார்கள், என்று விவரம் அறிந்தவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்... ஓடோடி வந்து விளக்கம் சொன்ன தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம்.!