குட்டி ரவுடிகள் அட்டூழியம்.. துப்பாக்கியுடன் வலம் வரும் போலீஸ்.. காஞ்சியில் பாதுகாப்பு அதிகரிப்பு..!
காஞ்சிபுரத்தில் உருவெடுக்கும் குட்டி ரவுடிகளை அடக்க போலீசார் அதிரடி நடவடிக்கையாக 24 மணி நேரமும் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபடுவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
கோயில் நகரம், ஆன்மீக பூமி என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் சென்னைக்கு புறநகர் பகுதி என்பதால், வேலை வாய்ப்புகளை தேடி காஞ்சிபுரத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மறுபுறம் வியாபாரிகளை மிரட்டி மாமுல் வாங்குவதற்காக, ரவுடிகள் உதயமாகுவது வழக்கமாக இருந்து வருகிறது.
குறிப்பாக ஸ்ரீதர் தனபால் என்ற பிரபல ரவுடி, காஞ்சிபுரத்தை தனது கட்டுக்குள் வைத்திருந்து காஞ்சிபுரத்தில் தாதாவாக செயல்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார், அதிரடி நடவடிக்கையாக ஸ்ரீதர் வெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
ஸ்ரீதர் உயிரிழந்த பிறகும் தொடர்ந்து பல்வேறு கொலை சம்பவங்கள் காஞ்சிபுரத்தில் அரங்கேறி வந்தன. இந்தநிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பெரிய அளவில் எந்தவித கொலைகளும் நடைபெறாமல், ரவுடிகள் அட்டகாசத்தில் இருந்து காஞ்சிபுரம் மக்கள் நிம்மதி அடைந்திருந்தனர்.
இதையும் படிங்க: அவசர, அவசரமாக டெல்லி கிளம்பிய அண்ணாமலை... எடப்பாடி என்ன சொன்னார் தெரியுமா?
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு முன்னாள் பிரபல ரௌடியான வசூல்ராஜாவை, கல்லூரி மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரமான முறையில் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முக்கிய ரவுடியை கொலை செய்தால் தாமும் பிரபலமாகலாம் என்பதற்காகவே, இந்த கொலை நடந்தது என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் பிரபல ரவுடி ஸ்ரீதரின் வலதுகையான, பொய்யாகுளம் தியாகு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கொலைச் சம்பவம் காஞ்சிபுரத்தில் இருக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
எனவே, குட்டி ரவுடிகளை உடனடியாக அடக்க வேண்டும் என்பதற்காக, காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்தி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ரவுடிகளின் நடமாட்டத்தை குறைக்க முடியும் என போலீசார் கருதுகின்றனர். சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் மற்றும் வாலாஜா போலீசார் ஆகிய நான்கு காவல் நிலைய எல்லைகளில் இந்த ரோந்து பணிகள் நடைபெற்று வருகிறது. 4 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் இந்த ரோந்து பணி நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள செவிலிமேடு, பொய்யா குளம், நாகலத்து மேடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தப் பகுதியில் குற்றவாளிகள் தங்கி இருப்பார்கள் என பட்டியல் எடுத்து, அந்தப் பகுதிக்கு காவல்துறையினர் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருது நிம்மதியை தருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்-ம் நானும் பிரிந்தது பிரிந்ததுதான்.. இனி சேர்வதற்கு சாத்தியமே இல்லை.. இபிஎஸ் திட்டவட்டம்..!