அவுரங்கசீப் கல்லறை விவகாரம்.. பதற்றத்தை தணிக்க சம்பாஜி நகரில் 144 தடை உத்தரவு..!
அவுரங்கசிப் கல்லறை விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பாஜி நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் குள்தாபாத் என்ற பகுதி உள்ளது. அங்கு உள்ள முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ளது..இந்தக் கல்லறை தற்போது இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருப்பதுடன் தேசிய நினைவுச் சின்னமாகவும் உள்ளது.
முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று பா.ஜ.க முன்னாள் எம்.பி நவ்நீத் ராணா, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அவரை தொடர்ந்து, பலரும் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். அதுமட்டுமல்லாது கல்லறையை அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: சென்னை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது.. ஐகோர்ட் அதிரடி..!
இது தொடர்பாக நாக்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித போர்வை எரிக்கப்பட்டது என்ற வதந்தி பரவியதால் பெரும் கலவரம் வெடித்தது. இதனால் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் 29 ஆம் தேதி சத்ரபதி சம்பாஜியின் நினைவுநாளும், 30-ந் தேதி மராட்டிய புத்தாண்டான 'குடிபட்வா' விழாவும், 31-ந் தேதி ரம்ஜான் மற்றும் ஜூலேலால் ஜெயந்தி மற்றும் ஏப்ரல் 6 ஆம் தேதி ராம நவமி போன்ற விழாக்களும் வருகின்றன.
இந்த நாட்களில் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு எதிராக போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்ரபதி சம்பாஜிநகரில் அசம்பாவிதத்தை தவிர்க்கவும், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு விதித்து காவல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் எம்.எல்.ஏ அபு அஸ்மி, முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஒரு நல்ல நிர்வாகி என்றும் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவுரங்கசீப் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவரது கருத்து ஏற்கெனவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டை ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினர், தமிழர்கள் அல்ல’.. சர்ச்சையை கிளப்பிய ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்..!