கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு...
குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுமா?....
டெல்லி நிர்பயா சம்பவத்திற்கு பிறகு ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய வழக்கு எதுவென்றால், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவமே.
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் (R.G. Kar Medical College and Hospital) என்ற மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ந் தேதி பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் மிக கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக 10-ந் தேதி ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: இலவசங்களை எதிர்க்கும் பிரதமர் மோடி! வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய பாஜக: கெஜ்ரிவால் கிண்டல்
இந்த சம்பவம் மேற்குவங்கம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெண் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி களத்தில் இறங்கி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. ஆகஸ்ட் 13-ந் தேதி இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மறுபுறம் மருத்துவமனைகளில் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புக் குழு ஒன்றை தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது.
சியல்டா மாவட்ட கூடுதல் மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அக்டோபர் 7-ந் தேதி சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அன்றுதொடங்கி நாள்தோறும் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 9-ந் தேதியோடு அனைத்துத் தரப்பு விசாரணைகளும் முடிந்தன. 50 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்தது.
இன்னும் சற்றுநேரத்தில் இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை தரவேண்டும் என்று உயிரிழந்த பெண்ணின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் நடந்தபோது மேலும் சிலர் அங்கிருந்ததாகவும், அவர்கள் நீதிமன்றம் தரக்கூடிய தண்டனையில் இருந்து தப்பி விடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
பெண் டாக்டர் படுகொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி சீல்டா நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்க ஒட்டுமொத்த மேற்குவங்கமும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில், மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்: மெட்ரோ ரயிலில் பாதி கட்டணம்; கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி