கல்லா பெட்டியில் கை வைத்த கேசியர்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி.. 5 நாளில் ரூ.40 ஆயிரம் முறைகேடு.. அப்போ 7 வருசத்தில்.?
பிரபல பிரியாணி கடையின் கோவை கிளையில் கேசியராக வேலைபார்த்தவர் வெறும் 5 நாட்களில் 40 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்தது அம்பலமான நிலையில், 7 வருடமாக அவர் எவ்வளவு முறைகேடு செய்திருப்பார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
"Food is a word, Biryani is an Emotion" என்பது தான் இன்றைய பெரும்பாலான இளசுகளின் தாரக மந்திரம். அந்த அளவிற்கு பிரியாணி இளசுகளின் மத்தியில் கொடிகட்டி பறக்கிறது. ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, ஹைதரபாத் பிரியாணி, நாகர்கோவில் வெள்ளை பிரியாணி என பல பல வண்ணங்களில், பல பல சுவைகளில் பிரியாணி கிடைத்தாலும் அத்தனையும் ருசி பார்க்க வேண்டும் என இந்தக்கால foodies என தங்களை தாங்களே அழைத்துக் கொள்ளும் சாப்பாட்டு ராமன்களின் ஆசை. இதனலாயே தமிழகம் முழுவதும் பிரியாணி வியாபராமும் கொடிகட்டி பறக்கிறது.
தினமும் 50கிலோ பிரியாணி விற்பனை என்பது மிகச்சாதாரண கடைகளில் கூட நடந்து விடுகிறது. இதுவே பல பல கிளைகள் துவங்கி, பிரியாணி விற்பனையையே பெரு வியாபராமாக செய்து வரும் நிறுவனங்களின் லாபம் எவ்வளவு என கேட்டால் தலையே சுற்றிவிடும். இதனாலேயே இது போன்ற பெரிய ஹோட்டல்களில் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களையே கேசியராக வைத்துக் கொள்வார்கள். கணக்கு வழக்கில்லாமல் காசு புழங்கும் இடம் என்பதால், கரை படியாத கைகளை தான் முதலாளிகள் விரும்புவர். அப்படி நம்பி வேலைக்கு வைத்த கேசியார் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் மனமுடைந்து போவர். இவ்வாறு கோவையில் பிரபல பிரியாணி கடை ஒன்றில் 7 ஆண்டுகளாக கேசியராக வேலை பார்த்து வரும் கேசியர், கையாடல் செய்த புகாரில் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நாய் போல் குரைத்துக் கொண்டே இளைஞர் எடுத்த விபரீத முடிவு... கோவையில் பரபரப்பு...!
கோவை காந்திபுரம் 11 வது வீதியில் எஸ். எஸ். ஹைதராபாத் பிரியாணி என்ற பிரபல அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. கோவை அசைவ பிரியர்களின் விருப்பமான உணவகங்களில் ஒன்றாக இருக்கும் இந்த உணவகத்தில், 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் கடந்த ஏழு வருடங்களாக பாபு என்பவர், பார்சல் உணவு பிரிவில் கேசியராக வேலை செய்து வருகிறார். வாடிக்கையாளர்கள் கேட்கும் பார்சல் உணவுக்கான ரசீது வழங்குவது மற்றும் அதற்கு உண்டான தொகையை பெற்று வரவு வைப்பது இவரது அடிப்படை பணி. இந்த நிலையில், கடந்த 07-03-2025-ஆம் தேதி முதல் 11-03-2025 ஆம் தேதி வரை, கடையின் வரவு செலவு கணக்கில் 40 ஆயிரம் ரூபாய் பணம் குறைந்துள்ளது.
இது குறித்து நிர்வாக தரப்பிலிருந்து, கடையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது, கேசியர் பாபு அடிக்கடி பணம் எடுப்பதை பார்த்ததாகவும், அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், சக ஊழியர்கள் நிர்வாக தரப்பிடம் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்த ஆதாரங்களுடன் பாபுவை அழைத்து கடை நிர்வாக தரப்பில் விசாரித்த போது, கேசியரான பாபு முன்னுக்குப் பின் முரணான பதில் தெரிவித்திருக்கின்றார். பிறகு தான் பணத்தை திருடி உள்ளதை ஒப்புக்கொண்டிருக்கின்றார். இது குறித்து காட்டூர் காவல் நிலையத்தில், எஸ்.எஸ்.ஹைதராபாய் பிரியாணி கடை தரப்பில் புகார் தரப்பட்டது.
புகாரின் அடிப்படையில் பி.என்.எஸ். 306 சட்டப்பிரிவின் கீழ் போலிசார் வழக்கு பதிவு செய்தனர். நூதன முறையில் கையாடல் செய்த நாற்பதாயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலிசார், பாபுவை சிறையில் அடைத்தனர். ஊழியர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், நல்ல ஊதியம், விழாக்காலங்களில் போனஸ் வழங்கி, ஊழியர்களுக்கு உண்டான அனைத்து வசதிகளையும் வழங்கி வருவதாகவும், அவ்வாறான நிலையிலும் இதுபோன்ற கையாடல் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவித்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: வேட்டையாடிய சிறுத்தை சிக்கியது.. கோவை மக்கள் நிம்மதி.. இரவு முழுவதும் நடந்த தேடுதல் வேட்டை..!