தாய், தந்தை, மகன் கொலை.. வேகமெடுக்கும் சிபிசிஐடி விசாரணை.. பல்லடம் வழக்கில் பரபரப்பு..!
சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு திருட்டு வழக்குகளில் சிறையில் இருக்கும் நபரை அழைத்து வந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை தெய்வசிகாமணி, தாய் அலமேலு அம்மாள் மற்றும் மகன் செந்தில்குமார் ஆகிய மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். மேலும் அவர்களின் வீட்டில் இருந்த எட்டு சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி நடந்த கொடூரமான கொலை சம்பவம் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க 14 தனி படைகள் அமைக்கப்பட்டது.
போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வந்த நிலையில் 110 நாட்களைக் கடந்தும் வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் இருந்தது. இதனிடையே கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதி அன்று இந்த கொலை வழக்கை CBCID-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் CBCID காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதேவி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் மார்ச் 21 ஆம் தேதியில் இருந்து கொலை வழக்கை விசாரிக்க ஆரம்பித்தனர். கொலை தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் சம்பவம் நடந்த இடம், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர்.
உயிரிழந்த செந்தில்குமாரின் மனைவி கவிதா மற்றும் அவர்களது உறவினர்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொலை நடந்த இடத்தில் அன்றைய தேதியில் பதிவான சுமார் 30,000 செல்போன் தரவுகளையும் சேகரித்து விசாரணையை தீவிர படுத்தினர்.
இதையும் படிங்க: பல்லடத்தில் பெண் ஆணவக்கொலை? காதலி இறப்பில் மர்மம்.. உடலை தோண்டி எடுத்து ஆய்வு..!
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்த குறவர் இனத்தை சேர்ந்த சுக்கன் என்பவரின் மகன் ராமச்சந்திரன் என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வெள்ளை கோவில் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். காங்கேயம் சென்னிமலை பகுதிகளில் இதே போன்று நடந்த கொலை சம்பவங்களில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் ராமச்சந்திரனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ராமச்சந்திரன் ஈடுபட்டுள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்வதற்காக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமச்சந்திரனை பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் பல்லடம் மூவர் கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்படுவார் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இரவில் திருட்டு.. பகலில் உல்லாசம்.. இரும்பு ராடோடு வீதி உலா.. கதிகலங்க வைத்த திருடர்கள் கைது..!