×
 

அடுத்தடுத்து செயின் பறிப்பு.. என்கவுன்டரில் மாஸ் காட்டிய போலீஸ்.. காவல் ஆணையர் விளக்கம்..!

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையன் போலீசை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்த போது போலீசார் என்கவுன்டர் செய்தனர். இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நேற்று காலை அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து ஆறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது. குற்றவாளிகளை பிடிக்க காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன் கார்த்திக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. செயின் பறிப்பு நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார் துப்புத் துலக்கினர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஜாபர் குலாம் ஹுசைன், சூரஜ் என்பது தெரிந்தது. விமானம் மூலம் தப்ப இருந்த இரண்டு பேரையும், விமானத்தை நிறுத்தி வைத்து தெற்கு மண்டல இணை ஆணையர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை சென்னை தரமணியில் வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: முதல்வரின் தேர்தல் வாக்குறுதி! கோவை கிரிக்கெட் மைதானத்திற்கு கிடைத்த தடையில்லாச் சான்று!!!

இதனையடுத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நகைகள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட டூவிலரை மீட்க அழைத்துச் சென்றபோது தரமணி ரயில் நிலையம் அருகே ஜாபர் போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றதாகவும், இதனால் தற்காப்புக்காக போலீசார் நடத்திய என்கவுன்டரில் ஜாபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். மாநகர காவல் ஆணையர் அருண் கூறியதாவது; சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரும் இரானி கொள்ளையர்கள். கொள்ளையர்கள் பறித்துச் சென்ற செயின்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. 

பிடிபட்ட கொள்ளையர்கள் மீது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் நபர்களுக்குத் தொடர்பு இல்லை என்பது விசாரணையில் தெரிந்தது. குற்றம் நடந்த 3 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்தே குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடித்தோம். விமானத்தை நிறுத்தி வைத்து, அதிலிருந்து குற்றவாளிகளைக் கைது செய்தோம். மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய கைதானவர்களை அழைத்துச் சென்றபோது என்கவுன்ட்டர் நடந்துள்ளது. 

சுட்டுக்கொல்லப்பட்ட குலாம், வண்டியில் மறைத்து வைத்திந்த துப்பாக்கியால் 2 ரவுன்ட் சுட்டார். அதில் ஒன்று போலீஸ் வாகனத்தில் பட்டது. தற்காப்புக்காக போலீஸ் ஒரு முறை சுட்டனர். தற்காப்பு நடவடிக்கையாக என்கவுன்டர் நடந்தது. அதில் தான் குலாம் பலியானார். போலீசார் என்கவுன்டரில் பலியான ஜாபர் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என மாநகர காவல் ஆணையம் அருண் விளக்கம் அளித்தார்.

மாநகர காவல் ஆணையராக அருண் கடந்தாண்டு பதவியேற்றார். பதவியேற்கும் போது ரவுடிசத்தை கட்டுப்படுத்த என்கவுண்டர் கிடையாது. ரவுடிகளுக்கு என்ன மொழி புரியுமோ அந்த வகையில் நடவடிக்கை இருக்கும் என அருண் சொன்னது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இனி பி.இ., பி.எட்., முடித்தாலே பட்டதாரி ஆசிரியர் ஆகலாம்! புதிய அரசாணை வெளியீடு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share