×
 

காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்..!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் (93) காலமானார்.

வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால்,  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார். இவருடைய மறைவை மகள் தமிழிசை உறுதி செய்துள்ளார். குமரி அனந்தன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19 ஆம் தேதியன்று பிறந்தவர் குமரி ஆனந்தன். காமராஜரின் சீடராக விளங்கிய இவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக 1995-96 காலகட்டத்தில் பொறுப்பு வகித்தவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர்.

1977-ம் ஆண்டு நாகர்கோயில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழகத்தில் பனைவளம் பெருக முழங்கியவர். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசின் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்.
குமரி அனந்தனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கி சிறப்பித்தார்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share