டெல்லி சட்டமன்றம் கூடியது.. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு...!
டெல்லியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகர் அரவிந்த் குமார் லவ்லி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த 5-ந் தேதி டெல்லி சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. 8-ந் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களிலும் பாஜகவும், ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வென்றன. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
இதன் பின்னர் ஷாலிமார்பாக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜகவின் ரேகா குப்தா, டெல்லி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதலமைச்சரும், கல்காஜி தொகுதி எம்எல்ஏவுமான அதிஷி எதிர்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். இடைக்கால சபாநாயகராக அரவிந்த் குமார் லவ்வி, ஆளுநரால் நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: டெல்லி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசர அவசரமாக ரோமில் தரை இறக்கம்..!
இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பின் பாஜக தலைமையிலான அரசு அமைந்தபின் முதலாவது சட்டமன்றக் கூட்டதொடர் இன்று கூடியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள், அவர்களில் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் அரவிந்த் குமார் லவ்லி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்படி, பர்வேஷ் சிங், கபில் சர்மா, பங்கஜ் குமார், ஆசிஷ் சூட், மஞ்சிந்தர் சிங், ரவீந்தர் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.பிற்பகல் 2 மணியளவில் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
நாளை துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, டெல்லி சட்டமன்றத்தில் உரையாற்ற உள்ளார். அப்போது ஆம் ஆத்மி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியின் வரவுசெலவு கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆம் ஆத்மி ஆட்சி இழக்கக் காரணமே அதன்மீதான ஊழல் புகார்கள் தான். நாளைய தினம் கணக்குத் தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் மேலும் பல ஆம் ஆத்மி கட்சியினர் சிறை செல்ல நேரிடும் என தலைநகர் தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: டெல்லியில் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி..! அரவிந்த் கெஜ்ரிவால் தோற்றதால் அடிச்சது லக்..!