டாஸ்மாக்கில் ஒரு லட்சம் கோடி ஊழலா..? அமலாக்கத்துறை கண்டுபிடித்தது என்ன..?
டாஸ்மாக்கில் ஒரு லட்சம் கோடி ஊழலா..? அமலாக்கத்துறை கண்டுபிடித்தது என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டெல்லியில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பிய சக்தி எது தெரியுமா? மதுபான கொள்கை விவகாரம் தான். அந்த ஒரே ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு கிடுக்கிப்பிடி போட்ட மத்திய அரசு, டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது.
கிட்டத்தட்ட அதே பார்முலாவைத் தான் தமிழ்நாட்டில் மத்திய அரசு பின்பற்றப் போகிறது என்று ஆரூடம் கணிக்கிறார்கள் டெல்லிவாலாக்கள். ஏனெனில் நடப்பு திமுக ஆட்சியை குறை சொல்ல சட்டம்-ஒழுங்கு, ஊழல் என்று எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் முடிந்தவரை அதில் வெளிப்படைத்தன்மையுடன் இந்த அரசு இயங்குகிறது. அப்படி ஏதேனும் சிக்கினால் மத்திய அரசு கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்காது என்பதே உண்மை.
இதையும் படிங்க: திமுகவை காப்பி அடித்த பாஜக... டெல்லி பெண்களுக்கு ஜாக்பாட்!!
ஆனால் டாஸ்மாக்கில் சமீபத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை திமுக அரசுக்கு பெரும் தலைவலியை கொண்டு வந்து சேர்க்கும் என்று கூறுகின்றனர். அப்படி என்ன நடக்கிறது டாஸ்மாக்கில்.. சற்று விரிவாக பார்ப்போம்...
எந்த அடிப்படையில் அமலாக்கத்துறை தனது சோதனையை முன்னெடுத்துள்ளது என்றால்... மதுபான ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் எந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது முதல் கேள்வி. அதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது அதுதொடர்பான குற்றச்சாட்டு.. ஆயத் தீர்வை விதிகளின்படி, மதுபான ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் ஆயத் தீர்வைகள் வசூலிக்கப்பட்டு அரசு கஜானாவுக்குச் செலுத்தப்படும். ஆனால், இப்பொழுது தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படக்கூடிய மொத்த மதுபானங்களில் 60% சரக்குகளுக்கு ஆயத்தீர்வை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 40% சரக்குகளுக்கு எவ்விதமான ஆயத்தீர்வையும் வசூலிக்கப்படாமல் கள்ளத்தனமான விற்பனைக்கு அனுப்பப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறுகிறது.
மதுபான கொள்முதலில் மட்டுமே ஆண்டொன்றுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் கோடி அளவிற்கு மேல் ஊழல் நடைபெறுவதாகவும், அதில் ரூ 25,000 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் அமலாக்கத்துறை கணக்கிட்டுள்ளதாம்... அதேபோல ஆண்டொன்றுக்கு ரூபாய் நாற்பத்தைந்தாயிரம் கோடி முதல் ரூபாய் ஐம்பதாயிரம் கோடி வரை வரி வருவாய் ஈட்டக்கூடிய ஒரு துறை எப்பொழுதும் நட்டத்தில் இயங்குவதாகவே கணக்கு காண்பிக்கப்படுவது ஏன் என்பதும் அமலாக்கத்துறையின் கேள்வி.
மேலும், மதுபான கிடங்குகளில் உள்ள மதுபான பாட்டில்களை அடகு வைத்து ரூ. 500 கோடி முதல் ரூ. 1,000 கோடி வரையிலும் பல்வேறு வங்கிகளில் டாஸ்மாக் நிறுவனம் கடன் பெற்று வட்டி செலுத்தி வருகிறது. தினமும் விற்பனையாகக் கூடிய மதுபானங்களின் அளவை சொத்தாகக் கணக்குக் காட்டி வங்கிகளில் கடன் பெற்று இருப்பதே வங்கிகளை ஏமாற்றுவதற்கும், அரசுத் துறையே மோசடி செய்வதற்கும் சமமாகும்.
இதுமட்டுமல்லாமல் டாஸ்மாக் மீது வைக்கப்படும் மற்றொரு முக்கியமான குற்றச்சாட்டு. மொத்தம் 19 ஆலைகளிலிருந்து மதுபானம் சமமான அளவு கொள்முதல் செய்யப்பட வேண்டும். மாறாக, SNJ, KALS 3 ஆகிய நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே அதிக அளவில் மதுபான கொள்முதல் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
எல்லாமே டிஜிட்டல் மயமாகி வரும் சூழலில் கொள்முதல் செய்யப்படும் மதுபானங்கள் எந்தெந்த சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது என்ற தகவல் மட்டும் டிஜிட்டல் செய்யப்படாமல் கைகளில் கணக்கு எழுதப்படுவது ஏன் என அமலாக்கத்துறை கேள்வி எழுப்புகிறது. 40 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்ற TASMAC நிறுவனத்திற்கு சொந்தமாக வாகனங்கள் இல்லாமல் ஏன் ஒப்பந்த வாகனங்கள் மூலம் மதுபான விநியோகம் செய்யப்படுகிறது என்பதும் அமலாக்கத்துறையின் கேள்வியாகும். அதிலும் நடைமுறையில் உள்ள ஒரு கி.மீ ரூ 8 என்ற கட்டணத்தை விட, இரண்டு மடங்கு கூடுதலாக ரூ 15 எனக் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டது ஏன் என்பதும் துணைக் கேள்வியாகும்.
இப்படி சிறியதும், பெரியதுமாக பல்வேறு கேள்விகளை பட்டியலிட்டு டாஸ்மாக் நிர்வாகத்தை இனிவரும் மாதங்களில் அமலாக்கத்துறை குடைய இருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். தேர்தல் நெருங்க, நெருங்க இந்த சோதனைகளும் அதிகமாகும், சம்பந்தபட்ட அமைச்சர், நிர்வாகிகள் ஆகியோர் மீதும் வழக்குகள் பாயும் என்கின்றனர். இந்த குற்றச்சாட்டுக்களுக்கும், சோதனைகளுக்கும் திமுக அரசு தரப்போகும் பதில் என்ன என்பதை பொறுத்தே தமிழக அரசியல் களம் மாறும் என்கின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் நோக்கமின்றி சிறுமியின் உதட்டை பிதுக்குதல் ‘போக்ஸோ’ குற்றமாகாது... டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!