போலீஸ் ஸ்டேஷனில் பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு.. நிஜத்தில் நடந்த விடுதலை பட பாணி சம்பவம்..!
திருட்டு வழக்கில் விசாரிப்பதாக கூறி நள்ளிரவில் கணவன், மனைவியை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சேகர். (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது மனைவி மஞ்சுளா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2001ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களது பக்கத்து வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் குவிந்த போலீசார் திருடர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சேகர் - மஞ்சுளா தம்பதியிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். அவர்களும் தங்களுக்கு ஏதும் தெரியாது என பதிலளித்துள்ளனர். இருப்பினும் அழைக்கும் போது விசாரணைக்கு வர வேண்டும் என எல்லாரிடமும் கூறுவது போல சொல்லிட்டு போலீசார் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அன்றிரவு 2 மணி அளவில் மஞ்சுளாவையும் - சேகரையும் போலீசார் விதிமுறைகளை மீறி விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றுள்ளனர். அப்போது காவல் ஆய்வாளராக இருந்த ரங்கசாமி, காவலர்கள் வீராணத்தேவர், சின்ன தேவர் ஆகியோர் சேகரை கடுமையாக தாக்கிய போலீசார், திருட்டை செய்தது யார் எனக்கேட்டு அடித்துள்ளனர். சேகர் வலியால் துடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அங்கு பாவமாய் நின்ற மஞ்சுளாவை அழைத்து அவரை ஆடைகளை கலைந்து மானபங்கப்பட்டுத்தி உள்ளனர். கணவன் கண்முன்னே தனக்கு நேர்ந்த துயரத்தால் மஞ்சுளா மனமுடைந்து கதறி அழுதுள்ளார். மனைவியை காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சியில் சேகரும் விரக்தி அடைந்துள்ளார். விடிய விடிய அவர்களை கொடூரமாக தாக்கி விசாரித்துள்ளனர்.
இதையும் படிங்க: அவனை சும்மாவே விடக்கூடாதுடா..! திண்டுக்கல்லில் அரங்கேறிய இரட்டை கொலை.. பாதை மாறிப்போன 2K கிட்..!
காலையில் காயமடைந்த இருவரையும் வீட்டிற்கு செல்லும் படி விரட்டிய போலீசார், இன்று மாலையும் விசாரணைக்கு வர வேண்டும். இனி அழைக்கும் போதெல்லாம் விசாரணைக்கு வரவேண்டும் எனக்கூறி உள்ளனர். வீட்டிற்கு வந்ததும் மன உளைச்சலிலும், விரக்தியிலும் இருந்த மஞ்சுளா வீட்டின் பின் புறத்தில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி திண்டுக்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாத குற்ற உணர்ச்சியில் இருந்தனர். தனக்கு நடந்த அநீதியால் வெகுண்டெழுந்த சேகர், காவல் நிலையத்தில் தங்களுக்கு நேர்ந்த துயரம் குறித்து அப்போது திண்டுக்கல் மாவட்ட கோட்டாட்சியராக இருந்த ஜெகநாதனிடம் புகார் அளித்தார்.
ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2001ம் வருடம் பிப்ரவரி 25ம் தேதி சேகர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே கோட்டாட்சியர் ஜெகநாதனிடம் சேகர் வழங்கிய புகார் குறித்து கோட்டாட்சியர் ஜெகநாதன் ஊர் மக்களிடமும் காவல் நிலையத்திலும் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக திரட்டப்பட்ட ஆவணங்கள் கோட்டாட்சியர் சார்பில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ரங்கசாமி, காவலர்கள் வீராண தேவர், சின்னத் தேவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 24 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞராக சண்முகபார்த்தீபன் ஆஜரானார். வழக்கு விசாரணை நீதிபதி தீபா முன்னிலையில் நடந்தது. இந்நிலையில் ஒய்வு காவல் ஆய்வாளர் ரங்கசாமி, காவலர்கள் வீரத்தேவர், சின்னதேவர் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீபா உத்தரவிட்டார். 24 ஆண்டுகளுக்கு முன்பு காவலர்களாக இருந்த போது செய்த குற்றத்திற்காக ஒய்வு பெற்ற பின்பு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிடுகிடுத்துப் போன திண்டுக்கல்... திடுக்கிடும் வெடி சத்தம்... மீண்டும் மீண்டும் மிரண்டு போன மக்கள்...!