திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு செக் வைத்த அமலாக்கத்துறை... 22-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவு...
திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு செக்
தமிழக நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகனின் வீடு வேலூர் காட்பாடியில் உள்ள காந்திமதி நகரில் உள்ளது. அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கதிர் ஆனந்த்-ம் அங்குதான் வசித்து வருகிறார். கடந்த 3-ந் தேதி துரைமுருகனின் வீடு, அலுவலகம், கதிர் ஆனந்த் எம்.பி-க்கு சொந்தமான கிறிஸ்டியன்பேட்டையில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனின் பள்ளிக்குப்பத்தில் உள்ள வீடு மற்றும் உறவினரான தாமோதரன் ஆகியோர் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 2 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அமலாக்கத்துறை அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்.
அமலாக்கத்துறை சோதனைக்கு நடுவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த துரைமுருகன் கடந்த 6-ந் தேதி டெல்லி சென்று திரும்பினார். அங்கு தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் தங்கிய துரைமுருகன், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் சென்னை திரும்பிய அவர், தனது இலாகா சார்ந்த விவகாரத்திற்காக மட்டுமே டெல்லி சென்றதாகவும், அமலாக்கத்துறை சோதனைக்கும் தமது டெல்லி பயணத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: கடப்பாறையால் உடைக்கப்பட்ட கதவு... இரவு முழுவதும் தொடர்ந்த ED ரெய்டு... அதிர்ச்சியில் வேலூர் திமுக!
இதனிடையே வேலூர் கிறிஸ்டியன்பேட்டையில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரில் 2-வது முறையாக அமலாக்கத்துறையினர் நேற்று சோதனையை தொடங்கினர். 17 மணிநேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. கடந்தமுறை சோதனை செய்தபோது கணினி ஒன்று இயக்கப்படாமல் இருந்ததாகவும் அதனை இயக்கிப் பார்த்ததோடு வேறு சில ஆவணங்களையும் சோதனைக்கு உட்படுத்தியதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. சோதனையின் முடிவில் ஒருசில பென்-ட்ரைவ்கள், ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவற்றை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றனர்.
அதுமட்டுமல்லாது வருகிற 22-ந் தேதி ஆஜராகும்படி திமுக எம்.பி.கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. முதலில் 2 நாட்கள் பிறகு பொறியியல் கல்லூரியில் 2 முறை என சோதனை நடைபெற்றுள்ள நிலையில், நேரிலும் ஆஜராக வேண்டும் என திமுக எம்.பி.கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: துரைமுருகன் வீட்டில் ரெய்டு ..பழைய வழக்கு சம்பந்த வழக்கா ..கொளுத்திப்போட்ட அமைச்சர் காந்தி ..!