சூடு பிடித்துள்ள தேர்தல் தந்திரங்கள்..! வழக்கம் போல மக்களுக்கு அல்வா கொடுக்கும் கட்சிகள்.. தெரிந்தே ரசிக்கும் வாக்காளர்கள்
சூடு பிடித்துள்ள தேர்தல் தந்திரங்கள்..
2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் -மே மாதங்களில் தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடக்க உள்ளது. மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்து நான்கு ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன.
கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனையோ நல்ல நலத்திட்டங்கள் மக்களை சென்று அடைந்துள்ளன. குறிப்பாக பெண்களுக்கான இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை என பல நலத்திட்டங்கள். ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
அதேபோன்று பல சங்கடமான சூழ்நிலைகளை ஆளும் திமுக அரசு சந்தித்தது. கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தை கையாண்ட விதம், கள்ளச்சாராயத் தொடர் மரணங்கள், தொடர் கொலைகளால் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பரந்தூர் விமான நிலைய நில கையகப்படுத்தும் பிரச்சனை, என பல சங்கடங்களையும் சந்தித்து கடந்து வந்திருக்கிறது திமுக அரசு.
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மதிமுக என பல கட்சிகள் கைகோர்த்து தங்களது வாக்கு சதவிகிதத்தை பல மடங்கு உயர்த்தி இருக்க பிடித்து வைத்துள்ளது.
இந்த வாக்கு சதவீதத்தை உடைக்க வேண்டும் என்றால் திமுக எவ்வாறு பலமான கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறதோ, அதற்கு இணையான அல்லது அதைவிட ஒரு படி மேல் சென்று பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே திமுகவை கூட்டணியை வெற்றி பெற முடியும் என்பது தான் தமிழகத்தின் இன்றைய கள சூழ்நிலை.
கடந்த உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள், என பல தேர்தல்களிலும் மத்தியில் ஆளும் பாஜக பல கூட்டணி அமைத்து வியூகம் அமைத்து. முட்டி மோதி பார்த்து விட்டது ஆனால் எந்த பலனும் அவர்களுக்கு தமிழகத்தில் கிடைக்கவில்லை. அதேபோன்று மற்றொரு பிரதான கட்சியான அதிமுகவும் சிறுபான்மையினர் ஓட்டுகளை கவரும் விதத்தில் பாஜகவை தவிர்த்து விட்டு தனியாக களம் கண்டது. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருந்த வாக்கு சதவீதத்தையும் இழந்து நிற்கிறது அதிமுக.
இந்த கட்சிகள் போதாது என்ற நிலையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தற்போது களத்தில் குதித்துள்ளது. மற்றொரு பக்கம் நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறது.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் தான் தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் தங்களது பிரச்சார யுக்திகளை தேர்தல் திட்டமிடல்களை ஆரம்பித்துவிட்டது என்று சொல்லும் அளவிற்கு அவற்றின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
தேர்தல் காலத்தில் ஏதாவது ஒரு பிரச்சனையை கையில் எடுத்து அவற்றின் போராட்ட வேகத்தை அதிகப்படுத்துவது ஒரு விதமான டெக்னிக் ஆகும். அந்த வகையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்து முன்மொழி கொள்கை தொடர்பான ஒரு பேட்டியை அளித்திருந்தார். இது தொடர்பாக உடனடியாக திமுக துணை முதலமைச்சர் தலைமையில் அதிரடியாக இந்த விஷயத்தை கையில் எடுத்து அடி அடி என அடிக்க தொடங்கி விட்டனர்.
அதன் உச்சமாக பேசிய உதயநிதி ஸ்டாலின் இனி கோபேக் மோடி அல்ல கெட்அவுட் மோடி என ஆவேசமாக பேசி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதியை நீ,வா போ, வாடா, போடா என்றெல்லாம் ஒருமையில் பேசி அவரை வம்புக்கு இழுத்தார்.
அண்ணாமலை உதயநிதி ஸ்டாலின் இடையான இந்த வார்த்தை போர் மிகப்பெரிய செய்தியாக மாறி உள்ளது. அண்ணாமலை இந்த ஒருமை பேச்சுக்கு பதில் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வேண்டாம், முடிந்தால் அண்ணா சாலை பக்கம் வந்து பாரு என பதிலுக்கு சவால் விட்டார்.
இரு பெரும் கட்சிகளுக்கிடையே நடைபெறும் வார்த்தை போரை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் நிச்சயம் இந்த புரிந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்லலாம்
மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் எத்தனையோ உள்ளன. குறிப்பாக மாநிலம் சார்பாக செப்பனிட வேண்டிய அல்லது புதிதாக போட வேண்டிய மாநில நெடுஞ்சாலைகள், ஊரக சாலைகள், உள்ளாட்சி சாலைகள் என பல இடங்களில் சாலைகள் பொத்தலாக கிடைக்கின்றன. பல இடங்களில் மக்கள் அவதிப்படுவதை தினம் தோறும் செய்திகளிலும் பார்க்க முடிகிறது.
இதை இந்த அளவிற்கு விவாதம் தேவையில்லாத வார்த்தைகளால் விவாதம் செய்வது எந்த அளவிற்கு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பலனை கொடுக்கும் என கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்கள்?
இதேபோன்று மத்திய அரசின் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள், புதிய சாலை போடும் பணிகள் என பல விஷயங்கள் மிகவும் பின்தங்கி 6 வருடங்களுக்கு மேலாக கேட்பாரற்று கிடக்கும் சூழ்நிலையும் தமிழ்நாட்டில் உள்ளது. அதற்கெல்லாம் அண்ணாமலை போன்றவர்கள் குரல் கொடுக்கலாமே. அதை சரி செய்துவிட்டு திமுகவுடன் சண்டை போடாலாமே? என்ற ஆதங்கக் குரலும் எழுவதை கேட்கத்தான் முடிகிறது.
எது எப்படியோ தேர்தல் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இன்னும் 12 அல்லது 13 மாதங்கள் கண்மூடி திறப்பதற்குள் ஓடிவிடும் என்பதை நம்மை விட அரசியல் கட்சியினர் நன்கு அறிவர். மக்களின் பிரதான அடிப்படை பிரச்சனைகளை விட்டு விட்டு நடக்கும் கேலிக்கூத்துகளை மௌனப் பார்வையாளர்களாக மக்கள் கண்காணித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.