குளியலறையில் மகளின் சடலம்.. கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை.. தந்தை, மகன் சேர்ந்து செய்த கொடூரம்..!
பீகாரில் இரண்டாவது மனைவியின் மகனுடன் சேர்ந்து, முதல் மனைவியின் மகளை கழுத்தை நெறித்து கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் கிராமத்தை சேர்ந்தவர் முகேஷ் சிங். முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி பிரமிளா தேவி. அவருக்கு சாக்ஷி என்ற மகள் உள்ளார். இரண்டாவது மனைவிக்கு துன் என்ற மகன் உள்ளார். முகேஷின் இரண்டு மனைவிகளும் ஒரே வளாகத்தில் தான் வசிக்கிறார்கள். ஆனால் இருவரும் தனித்தனி வீடுகளில் வசிக்கின்றனர். இந்த நிலையில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. இருவரும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் என்பதால் இருவருக்கும் கல்லூரி காலங்களில் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இருவரும் இருவேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கும், திருமணத்திற்கும் சாக்ஷியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. சாக்ஷியை வீட்டில் சிறை வைக்க ஆரம்பித்துள்ளனர். தங்களது சாதியிலேயே மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்துள்ளார் முகேஷ் சிங். இந்த நிலையில் சாக்ஷியும் அவரது காதலரும் கடந்த ஏப்ரல் 4ம் தேதி, வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றுள்ளனர். அங்கு சாக்ஷியின் காதலரின் உறவினர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். மகள் காணாமல் போனதால் முகேஷ் சிங் மற்றும் சகோதரர் துன் சாக்ஷியை தேடி உள்ளனர்.
இதையும் படிங்க: பீகாரில் பயங்கரம்.. மத்திய அமைச்சர் பேத்தி சுட்டுக்கொலை.. கணவன் வெறிச்செயல்..!
அலசி ஆராய்ந்து ஏப்ரல் 8 ஆம் தேதியே சாக்ஷி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். நேராக சாக்ஷியிடன் சென்று பேசி, அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டிற்கு வந்ததும் காதலை மறந்து விடும்படி கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக சாக்ஷிக்கும் அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. கோவத்தில் சாக்ஷியின் கழுத்தை நெறித்து கொலை செய்த முகேஷ் சிங், சடலத்தை வீட்டின் குளியலறை ஒன்றில் மறைத்து வைத்தார். மகள் எங்கே என பிரமிளா தேவி எழுப்பிய கேள்விகளுக்கு மலுப்பலாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பிரமிளா தேவி, மொய்தீன்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணையை துவங்கிய போலிசார், முகேஷ் சிங்கிடம் துருவி துருவி விசாரித்தனர். அப்போது முகேஷ் சிங் வீட்டில் ஆய்வு நடத்திய போது, பூட்டிய குளியறையில் துர்நாற்றம் வீசியது. உடனே குளியலறை கதவை உடைத்து சாக்ஷியின் உடலை மீட்டனர். சந்தேகத்தின் பேரில் முகேஷ் சிங்கிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் முகேஷ் சிங் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், துன்னுவையும் அவரது உறவினர் புட்டு சிங்கையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: NDA-விலிருந்து இரு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன்.. இனி அது நடக்காது.. அமித் ஷா முன்னிலையில் நிதிஷ்குமார் அறிவிப்பு!!