×
 

#FairDelimitation இந்தியாவின் ஆன்மாவுக்கு பாதிப்பு - பினராயி விஜயன்.. சிறப்பாக செயல்பட்டதற்கு தண்டனையா? - ரேவந்த் ரெட்டி..!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக் குழு கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் உரையாற்றினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ள தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களும், கர்நாடகாவின் துணை முதலமைச்சரும், ஆந்திரா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களின் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் வீடியோ கான்பரன்ஸ் முறையில் கூட்டத்தில் பங்கேற்றார்.

வந்திருந்தவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்றனர். கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்றவர்களின் பெயர்ப் பலகை ஆங்கிலத்திலும், அவரவர் தாய்மொழியிலும் என இருமொழிகளில் வைக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை 2020 வாயிலாக மும்மொழிக் கொள்கையை புகுத்த நினைக்கும் நேரத்தில் நாங்கள் இருமொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றுவோம் என்பதை சொல்லாமல் சொல்வது போல் அந்த பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டிருந்தன. 

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையில் மத்திய அரசின் உள்குத்து.. பாதிப்புகளை பட்டியல் போட்ட மு.க.ஸ்டாலின்..!

கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கவில்லை என்றும் அது நியாயமாக நடைபெற வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துவதாக கூட்டத்தின் நோக்கத்தை முதலில் தெளிவுபடுத்தினார். நாடாளுமன்றத்தில் நமது எண்ணிக்கை குறைவது மட்டும் பிரச்னை அல்ல, நமது உரிமைகள் பறிக்கப்படப் போகிறது என்பதே கவலை என்றார். மாநிலங்களுக்கு சேரவேண்டிய நிதியைக் கூட போராடி பெறவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்று அவர் கவலை தெரிவித்தார். 

பின்னர் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என்றார். மத்திய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். தொகுதி மறுசீரமைப்பு எவ்வாறு செயல்படுத்தப்பட போகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்று அவர் வலியுறுத்தினார். எண்ணிக்கை மட்டுமில்லை இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம் என்று பினராயி விஜயன் உருக்கமுடன் குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, மக்கள் தொகையை பல்வேறு திட்டங்கள் வாயிலாக செயல்படுத்தி சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனை தொகுதி மறுவரையறையா என்று கேள்வி எழுப்பினார். கட்சி வேறுபாடுகளை களைந்து நாம் போராட வேண்டிய நேரம் என்று அவர் குறிப்பிட்டார். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை என்றும் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இதுதொடர்பாக டெல்லியில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என ரேவந்த் ரெட்டி கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: #FairDelimitation: ரிப்பன் மாளிகையில் பல்பு போட்டு திமுக எதிர்ப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share