×
 

விவசாயிகள் 2 நாட்கள் உண்ணாவிரதம் நடத்தலாம்... அனுமதி வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்..!

இந்து அறநிலைய துறையை கண்டித்து விவசாயிகள் 2 நாட்கள் உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகள் சார்பில், தொடர்ந்து 20 நாட்கள் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தேவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், பல்வேறு காலகட்டத்தில் விவசாயிகளுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களை கோவில்களுக்கு சொந்தமான நிலங்களாக கூறி அவற்றை அரசு வகைமாற்றம் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 13 லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்து அறநிலைய துறை, வக்ஃப் வாரியத்திடம் வகைமாற்றம் செய்து ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - ரூ.498.8 கோடி ஒதுக்கீடு!

தானாக பெற்ற விவசாய நிலங்களுக்கு அரசு பட்டா வழங்க கோரியும், விவசாயிகளிடம் இருந்து விவசாய நிலங்களை மாற்றி கோவில், மற்றும் வக்ஃப் வாரியங்களுக்கான நிலம் என வகைமாற்றி விவசாயிகளிடம் வாடகை வசூலிக்கும் அறநிலையத்துறை, வக்ஃப் வாரியத்தை கண்டித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 19ம் தேதி ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், 20 நாட்கள் தொடர் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது என்றும் 2 நாட்கள் போராட்டத்திற்கு அனுமதியளிப்பதாக தெரிவித்தார்.

2 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி விவசாய சங்கம் காவல்துறைக்கு புதிதாக மனு அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அதை காவல்துறை உரிய பரிசீலினைகளை செய்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு நியமிக்கப்பட்ட முதல் கடந்த 4 ஆண்டுகளாக ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்டு வருவதை முதன்மை பணியாக செய்து வருகிறார். சென்னை உயர்நீதிமன்றம் கூட அவரது செயல்பாடுகளை பாராட்டி இருந்தது. இத்தனை நாட்கள் உரிய வாடகை தராமல் நிலத்தினை அனுபவித்த வந்த சிறுவியபாரிகள், கட்டிடங்கள் கட்டி வாடகைக்கு விட்டு லாபம் பார்த்தவர்கள் எல்லாம் கோயில் நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

ஆனால் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து வந்தவர்கள், வேளாண்மை தொழிலைக் காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குத்தகை தொகையை செலுத்துங்கள் அல்லது நிலத்தை ஒப்படையுங்கள் என்பது இந்து சமய அறநிலையத்துறையின் கோரிக்கையாக இருந்து வந்தது. அதற்கு விவசாயிகள் தரப்பில் பதில் தரப்படவில்லை. 

தற்போது தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 2 நாள் போராட்டம் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்துசமய அறநிலையத்துறையின் பதில் நடவடிக்கை என்ன என்பது அமைச்சர் சேகர்பாபுவின் கையில் உள்ளது.
 

இதையும் படிங்க: TANGEDCO போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share