×
 

நகையை வித்து ஃபைன் கட்டினோம்.. தாயகம் திரும்பிய மீனவர்கள்.. இலங்கை சிறையில் பட்ட கஷ்டம்..!

எல்லை தாண்டி மின்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், இன்று விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பினர். நகைகளை விற்று இலங்கை கோர்ட் விதித்த அபராத தொகையை கட்டியதாக கூறினர்.

தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ராமேஸ்வரம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடலோர காவல் படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி, 3 மீனவர்களையும் கைது செய்தனர்.

அவர்களின் படகையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். அதேபோல் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 மீனவர்கள் 2 விசைப் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடலோர காவல் ரோந்து கப்பல் வந்து, இந்திய கடல் எல்லைப் பகுதியை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரையும் கைது செய்து 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். 

இவ்வாறு ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கைது செய்து 3 விசை படகுகளை பறிமுதல் செய்த  இலங்கை கடற்படையினர் 13 பேரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இதற்கிடையே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு அவசர கடிதம் எழுதினார். இதை அடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. இருதரப்பு மீனவர்கள் பேச்சுக்கு ஏற்பாடு செய்ய அன்புமணி வலியுறுத்தல்..!

இந்த நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை இலங்கை நீதிமன்றம் ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரையும், விடுதலை செய்தது. மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதை அடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரையும், விமானம் மூலம் சென்னைக்கு அனுப்ப அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டனர். 13 மீனவர்களுக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் உடனடியாக வழங்கப்பட்டன. 

அதன்படி இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 13 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், மீனவர்கள் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து சென்னை விமான நிலையம் வந்த மீனவர்கள் கூறிய பொழுது அனைவருக்கும் தலா 80 ஆயிரம் ரூபாயில் இருந்து 1,40,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். 

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தாங்கள், தங்களது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து அபராத தொகையை செலுத்தியதாக தெரிவித்தனர்.  அதன் பின்னர் தான் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் கூறினர். தங்கள் முக்கிய வாழ்வாதராமான, மீன்பிடிக்க சென்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, அதை அவர்களே வைத்துக் கொண்டதாகவும், மீன் வலைகள் டீசல்களை அவர்களே  எடுத்துக் கொள்வதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய பின்பு மூன்று மணி நேரம் வரை தங்களை விமான நிலையத்திற்குள் காத்திருக்க வைத்த பிறகுதான் சோதனைகளை மேற்கொண்டு வெளியில் அனுப்புவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். சாதாரண மீனவர்கள் தானே என அலட்சியமாக அதிகாரிகளும் நடந்து கொள்வதாக கூறினர்.

இதையும் படிங்க: போராட்ட களத்திற்கு வரும் விஜய்... ஹேப்பி மோடில் வரவேற்ற திருமா...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share