‘இந்தி இந்துக்களுக்கானது, உருது முஸ்லிம்களுக்கானது என்பது ஒற்றுமைக்கு கேடு’.. உச்சநீதிமன்றம் வேதனை..!
இந்தி மொழி இந்துக்களுக்கானது, உருது மொழி முஸ்லிம்களுக்கானது என நம்புவது யதார்த்தத்தில் இருந்து விலகிச் செல்வதாகும், ஒற்றுமைக்கே கேடு என்று உச்ச நீதிமன்றம் கடும் வேதனை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், அகோலா மாவட்டத்தில் உள்ள பட்டூர் நகராட்சியில் ஒருவர் தன் கடைக்கு வைக்கும் பெயர் பலகையில் உருது மொழியில் எழுதியிருந்தார். ஆனால் பட்டூர் நகராட்சி சார்பில் பெயர் பலகை முதலில் மராத்தியிலும் பின்னர் உருதுவிலும் எழுத வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. முன்னாள் கவுன்சிலர் வர்சாட்டி, மகாராஷ்டிராவில் மராத்திதான் அரசு அலுவல் மொழி உருது என்பது தவறு என்று தெரிவித்தார்.
இதையடுத்து, கடையின் உரிமையாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உருது மொழியில் பெயர் பலகை வைப்பதில் என்ன தவறு எனக் கேட்கப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்சு துலியா, வினோத் சந்திரன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கூட தமிழுக்கு இடமில்லை..! மொழிக் கொள்கையை தோலுரித்த திமுக எம்.பி..!
அதில் கூறியிருப்பதாவது:
மொழி என்பது மதம் இல்லை. மொழி மதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது இல்லை. மொழி என்பது ஒரு சமூகத்தை, பிராந்தியத்தை, மக்களைச் சார்ந்தது, மதத்தை அல்ல. மொழி என்பது கலாச்சாரம். ஒரு சமூகத்தின் நாகரீகம், வளர்ச்சி, முதிர்ச்சி ஆகியவற்றை அளவிடும் கருவியாக மொழி பார்க்கப்படுகிறது. ஆதலால், உருது மொழி வழக்கில் வடக்கு, மத்திய இந்திய கலாச்சாரத்தின் கலவையாக இருக்கிறது. உருது என்பது வேற்றுமொழி அல்ல, இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்த மொழி, சிறப்பான பரிமாணத்தை அடைந்து, பல்வேறு புகழ்பெற்ற கவிஞர்கள் உருதுமொழியில் கவிதைகள் எழுதியுள்ளனர்.
உருது என்பது இந்தியாவில் இல்லாத மொழி, தொடர்பில்லாத மொழி என்று தவறாக நினைத்திருக்கிறோம். இதனால்தான் நாம் உருது மொழியால் அச்சப்படுகிறோம். மராத்தி, இந்தி மொழிபோல் இந்திய-ஆரிய மொழிதான் உருதுவும். இந்தி மற்றும் உருதுமொழி அடிப்படையில் ஒன்றுதான்.
நாங்கள் உருதுமொழியை விமர்சிக்கும் அதே நேரத்தில் இந்தி மொழியையும் விமர்சிப்போம். உருது என்பது பெர்சி,உருது கலந்த நாஷ்டாலிக். இந்தி என்பது தேவநாகரி. ஆனால், எழுத்துகள் மொழியைக் கொண்டிருக்காது. மொழிகளை வேறுபடுத்திக் காட்டுவது அவற்றின் தொடரியல், இலக்கணம் மற்றும் ஒலியியல் ஆகும். உருது மற்றும் இந்தி இந்த எல்லாவற்றிலும் பரந்த ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. இந்தி மேலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்டது மற்றும் உருது மேலும் பாரசீகமயமாக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் ஆண்டபோது மதத்தின் அடிப்படையில், மொழியின் அடிப்படையில் பிரித்தாளுமை செய்தனர். ஆதலால்தான் இந்தி இப்போது இந்துக்களின் மொழியாகவும், உருது முஸ்லிம்களின் மொழியாகவும் புரிந்து கொள்ளப்பட்டது, இது யதார்த்தத்திலிருந்தும், வேற்றுமையில் ஒற்றுமையிலிருந்தும், உலகளாவிய சகோதரத்துவத்தில்இருந்தும் பிரிந்திருப்பது பரிதாபமாகும்.
சாமானிய மனிதர் பேசும் இந்தி வார்த்தையில் உருது சொற்கள் கலந்துள்ளன. இந்தி என்ற வார்த்தை பெர்சியாவின் ஹிந்தவி என்ற வார்த்தையில் இருந்து பிறந்தது. உருது மொழி பல்வேறு இந்திய மொழிகளில் இருந்து சொற்களை வாங்கி தன்னை செழுமைப்படுத்தியது, சம்ஸ்கிருதத்திலிருந்தும் வார்த்தைகளை கொண்டுள்ளது.
உருது மொழி பல்வேறு மாநிலங்களில், யூனியன் பிரதேசங்களில் 2வது மொழியாக இருக்கிறது. ஆந்திரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், தெலங்கானா, உ.பி. மேற்கு வங்கம் ஆகியவற்றில் உருது அரசு அலுவல் மொழியாகஇருக்கிறது. யூனியன் பிரதேசங்களான டெல்லி,ஜம்மு காஷ்மீரிலும் உருது பேசப்படுகிறது. நம்முடைய பன்முகத்தன்மையை, வேற்றுமையில் ஒற்றுமையை, மொழி ஒற்றுமையை மதிக்க வேண்டும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 270 தாய்மொழிகள் இந்தியாவில் பேசப்படுகின்றன.
எனவே, இந்தியாவில் உள்ள தாய்மொழிகளின் உண்மையான எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று சொல்வது தவறாகாது. இந்தியாவின் மகத்தான மொழியியல் பன்முகத்தன்மை இதுதான்.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன வழக்கு.. மே 14ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை..!