அரசுப் பள்ளியில் ஆண்டு விழா.. மேடை ஏறிய சரித்திர பதிவேடு குற்றவாளி.. மாணவர்கள் மத்தியில் கஞ்சா பூ பாடல் கேடா?
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நடைப்பெற்ற அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் சரித்திர பதிவேடு குற்றவாளி கலந்துகொண்டு குத்து பாடலை பாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய தலைமுறைகளான வளரும் பள்ளி மாணவர்களுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டை நாம் அனைவரும் முன்னிருத்த வேண்டியது மிக மிக அவசியம். யாரை பின்தொடர வேண்டும் என்று தெரியாமல் தான் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் தவறான பாதையை தேர்ந்தெடுக்கின்றனர்.
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் போன்ற அறிவியலாளர்கள், நன்கு படித்தறிந்த அறிஞர்கள் போன்றோரை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு அவர்களது துறையில் சிறந்து விளங்குபவர்களை முன்மாதிரியாக எடுத்துக்காட்ட வேண்டும்.
இந்நிலையில் தான், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் சரித்திர பதிவேடு குற்றவாளியை மேடையேற்றியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவ்வாறு மேடையேறிய அந்த சரித்திர பதிவேடு குற்றவாளி, பள்ளி சிறார்கள் மத்தியில் கஞ்சாப்பூ கண்ணால என குத்து பாடலை பாடியதும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கன்றாம்பள்ளி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மார்ச் 22ஆம் தேதி இரவு, பள்ளி ஆண்டு விழா நடந்தது. இதில் பள்ளி மாணவர்களுக்கு நடன போட்டி, பாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதையும் படிங்க: மோமோஸ் சாப்பிட போறீங்களா உஷார்!! கிலோ கணக்கில் கெட்டுப்போன மாமிசம்.. பிரிட்ஜுக்குள் நாயின் தலை!!
விழாவில் துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி சுவிதா கணேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அத்தோடு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், இதில் துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி சுவிதாவின் கணவர் கணேஷ் என்பவரும் பங்கேற்றார். அவர் விழா மேடையில் சினிமா பாடலை பாடினார். இதுதான் தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
ஊராட்சி மன்ற தலைவி சுவிதாவின் கணவர் கணேஷ் மீது தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் கணேஷ் பலமுறை கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கும் கணேஷ் அரசுப் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்றதும், விழா மேடையில் மாணவர்கள் மத்தியில் சினிமா குத்து பாடலை பாடியதுமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கும் கணேஷ் அரசுப் பள்ளியில் நடந்த விழாவில் எப்படி பங்கேற்றார்? அவருக்கு யார் அழைப்பு விடுத்தார்கள்? என்ற கேள்விகளும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்தது.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, பள்ளி ஆண்டு விழாவிற்கு துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி என்ற முறையில் சுவிதாவை பங்கேற்க பள்ளி நிர்வாக குழுவினர் அழைத்துள்ளனர். அப்போது அவரதுடன் அவரது கணவரான கணேஷ் விழாவில் பங்கேற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் மேடையில் பேசி, சினிமா பாடல் பாடியும் உள்ளார்.
ஆனால் அவரை நாங்கள் பள்ளி ஆண்டு விழாவிற்கு அழைக்கவில்லை என்றும் தலைமையாசிரியர் சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட நபர் பங்கேற்று குத்து பாடல் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இளம்பெண் எம்.பி முதுகில் கை வைத்து கூப்பிட்ட ஆ.ராசா..! வைரலான போட்டோ..!