×
 

பட்டப்பகலில் அரங்கேறிய திருட்டு.. கொள்ளை முடிந்ததும் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க புறப்பட்ட திருடன்.. மடக்கிபிடித்த போலீஸ்..!

தேவகோட்டையில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளையடித்துவிட்டு, திருட்டு சம்பவத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதால் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க சென்ற திருடனை போலீசார் மடக்கி பிடித்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, வள்ளியப்ப செட்டியார் ஊரணி வடக்கு பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை. இவரது மனைவி நாகலட்சுமி. (வயது 32). இவர் வீட்டின் அருகே உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை காய்கறி வாங்க வாரச்சந்தைக்கு சென்றுள்ளார். காய்கறி வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது வீட்டில் கதவுகள் உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடந்துள்ளது.  பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், பணம் 2,70,000 ரூபாய் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் இவரது வீட்டின் அருகே உள்ள ஞானநந்தி நகர் பகுதியில் ராமநாதன் மகன் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறர். இவர் அன்றைய தினம் ராமநாதபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்நுழைந்த கொள்ளையன், 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்க பணம் ரூ.15,000 ஆகியவற்றை திருடிவிட்டு தப்பி உள்ளான். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கௌதம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்.

இதையும் படிங்க: கோயிலில் கைவரிசை காட்டிய ஆசாமி.. கட்டி வைத்து வெளுத்து வாங்கிய மக்கள்..!

அப்பகுதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். 5  தனிப்படையினர் அமைக்கப்பட்டு விசாரணையை தீவிர படுத்தினார். விசாரணையில் ஆசிரியர் வீட்டில் திருடு போனது 23 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் என உறுதி செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமரா மற்றும் தடயங்களை ஆய்வு செய்து விசாரணை செய்ததில்  திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பிரபல டவுசர் கொள்ளையன் காரைக்குடி சத்யா நகரை சேர்ந்த சரவணன் (40) என்பது தெரியவந்தது.  

பூட்டி இருந்த வீடுகளை மட்டும் நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் பழக்கம் கொண்டவன் இந்த சரவணன். திருட வரும்போது டவுசர் போட்டு கொண்டு மட்டும் திருடுவது பழக்கமாக கொண்டுள்ளதால் டவுசர் கொள்ளையன் என பெயர் உருவாகி உள்ளது. திருட்டு சம்பவ பகுதியில் பதிவான காட்சிகள் அடிப்படையில் சரவணனே கொள்ளையில் ஈடுபட்டது உறுதியனது. சரவணின் செல்போன் எண்ணை வைத்து இருப்பிடத்தை போலீசார் ட்ராக் செய்தனர்.

இந்நிலையில் திருட்டுச் சம்பவத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக சரவணன் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க சென்றது தெரியவந்தது அங்கு விரைந்த தனிப்படை போலீசார் திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில் பதுங்கி இருந்த சரவணனை கைது செய்து  32 பவுன் தங்க நகைகள், ரொக்கம் 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை மீட்டனர். ஆசிரியர் வீட்டில் திருடிய நகைகள் 100% மீட்கப்பட்டது. மேலும்  ராஜாமணி வீட்டில் திருடிய நகையில் 4 பவுன் தங்க நகைகள் மற்றும் 15,000 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டு சம்பவத்திற்கு உதவியதாக மேலும் 2 பேரை போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தங்க நகையை ரயிலில் தவறவிட்ட பெண்.. திருடிவிட்டு நாடகமாடிய ஊழியர் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share