கேன்சர் நோய் பாதிப்பு.. மனைவியை சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை.. அனாதையாய் நிற்கும் மகன்கள்..!
உத்தர பிரதேசத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கணவன், தன் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டில்லி மற்றும் உத்தர பிரதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது காஜியாபாத். இங்குள்ள ராஜ் நகர் விரிவாக்கப்பகுதியில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் குல்தீப் தியாகி. அவருக்கு வயது 46. மனைவி அன்ஷூ மற்றும் தனது இரு மகன்கள் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.
கணவன் மனைவி இணை பிரியாமலே இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே குல்தீப் தியாகி சோர்வாக காணப்பட்டார். மனவேதனை மற்றும் மன உளைச்சலில் சிக்கி தவித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குல்தீப் தங்கியிருந்த அறைக்குள் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து, அவரின் மகன்கள் பதறியடித்து ஓடிச் சென்று பார்த்தனர். அங்கு அறையில் குல்தீப் மற்றும் அன்ஷூ ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
மகன்கள் இருவரும் கதறி அழுதுள்ளனர். பின்னர் தாத்தாவின் உதவியுடன் தங்களது பெற்றோரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு இருவரும் தூக்கி சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். துப்பாக்கியால் சுட்டு இறந்ததால் இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த துவங்கினர்.
இதையும் படிங்க: பீகாரில் பயங்கரம்.. மத்திய அமைச்சர் பேத்தி சுட்டுக்கொலை.. கணவன் வெறிச்செயல்..!
குல்தீப் தியாகி அறையில் போலீசார் சோதனை செய்த போது அங்கு கடிதம் ஒன்று சிக்கியது. அதில், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன். என் குடும்பத்தினருக்கு இது பற்றி தெரியாது. உயிர் வாழ்வது நிச்சயமற்றது என்பதால், என் சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.
நாங்கள் என்றென்றும் ஒன்றாக இருப்போம் என மனைவியிடம் சத்தியம் செய்ததால், அவரையும் அழைத்துச் செல்கிறேன். இது என் தனிப்பட்ட முடிவு. என் குழந்தைகள் உட்பட யார் மீதும் குற்றஞ்சாட்ட முடியாது' என குறிப்பிடப்பட்டு இருந்தது. புற்றுநோய் பாதிக்கப்பட்டதால் மனைவியை சுட்டுக் கொன்று கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதுபோன்ற தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினைத் தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிடவும் அரசும் சினேகா போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் காத்துள்ளன. உதவிக்கு அழையுங்கள்: அரசு உதவி மையம் எண் - 104 சினேகா தன்னார்வத் தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060
இதையும் படிங்க: இத பிடிச்சா சளி சரியாபோயிடும்.? சிறுவனுக்கு சிகரெட் கொடுத்த டாக்டர்.. வீடியோவால் வந்த சிக்கல்..!