நடுநடுங்க வைத்த பூகம்பம்.. மியான்மரில் 650க்கும் மேற்பட்டோர் பலி.. நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா..!
இந்தியாவில் இருந்து 15 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்களை மத்திய அரசு மியான்மருக்கு இந்திய விமானப்படையின் சி130 ஜே விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
மியான்மர், தாய்லாந்தை மையமாக வைத்து நேற்று ஏற்பட்ட பயங்கரமான பூகம்பத்தில் சிக்கி இரு நாடுகளிலும் சேர்த்து 700க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மியான்மர் நாட்டில் மட்டும் இதுவரை 694 பேர் பலியானதாகவும், 1700 பேர் காயமடைந்துள்ளனர் என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவிப்பின்படி, “மியான்மரின் சர்காயிங் நகரின் வடமேற்கில் 16 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் நேற்று பிற்பகலில் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானநிலையில் அடுத்த 12 நிமிடங்களில் 2வது பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தாய்லாந்து மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... சரிந்த கட்டிடங்கள்; குவிந்த சடலங்கள்!!
தாய்லாந்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் கட்டப்பட்டு வந்த 30 மாடிக்கட்டிடம் கீழே சரிந்து தரைமட்டமானது. மியான்மர், தாய்லாந்தில் இந்த பூகம்பத்தால் கட்டிங்கள், சாலைகள், பாலங்கள் இடிந்து கடும் சேதமடைந்தன. மியான்மரின் மண்டலே நகரே உருக்குலைந்து போகும் அளவுக் கட்டிடங்கள் தரைமட்டமாகி, பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.
மியான்மர் நாட்டின் மண்டலே மண்டலத்தில் மட்டும் 694 பேர் பலியாகி உள்ளனர், 1700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியான்மரில் ஏற்பட்ட பூகம்பத்திலேயே, இந்த நூற்றாண்டிலேயே இதுதான் மோசமானதாகும். தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மியான்மரில் ராணுவம், துணை ராணுவப்படையினர், மீட்டுப்படையினர், போலீஸார், பொதுமக்கள் என இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கு பார்த்தாலும் கட்டிடங்களின் குவியல்கள் இருப்பதால் மீட்பு நடவடிக்கையை தொடர்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் பூகம்பம் வரலாறு காணாத அளவில் சேதத்தையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியிருப்பதால் அங்கு ஆளும் ஜூன்டா தலைவர் உலக நாடுகளின் உதவியைக் கோரியுள்ளார். ஜூன்டா தலைவர் மின் அங்க் ஹிலாங் வெளியிட்ட அறிவிப்பில் “ பூகம்பத்தால் நிலைமை மோசமாக இருக்கிறது, சேதங்கள் கடுமையாக இருக்கின்றன. ஆதலால் உலக நாடுகள் மீட்புப்பணிக்கு உதவ வேண்டும்” எனக் கேட்டுள்ளார். இதற்கு முன்பிருந்த ராணுவ ஆட்சியாளர்களும் இயற்கை சேதங்களி்ன்போது வெளிநாட்டு உதவியை நாடியுள்ளனர்.
மியான்மரில் பாதிக்கப்பட்ட 6 மண்டலங்களிலும் அவசரநிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தலைநகர் நேபிடாவில் உள்ளமருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் குவிந்து கிடக்கிறார்கள், அங்குள்ள பிணவறைகளில் உடல்கள் அடுக்கிவைக்கப்பட்டதைப் பார்க்கும்போது உருக்கமாக இருந்தது. இந்த சக்தி வாய்ந்த பூகம்பத்தின் தாக்கம் இந்தியாவில் சில நகரங்கள், மேகாலயா, மணிப்பூரிலும் உணரப்பட்டது, வங்கதேசத் தலைநகர் டாக்கா, சிட்டோகிராம், சீனாவில் இந்த பூகம்பம் உணரப்பட்டது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டுக்கு உதவ இந்தியா சார்பில் ஆப்ரேஷன் பர்மா செயல்படுத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து 15 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்களை மத்திய அரசு மியான்மருக்கு இந்திய விமானப்படையின் சி130 ஜே விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. இதில் டென்ட்கள், போர்வைகள், தூக்கும் மெத்தைகள், உணவுப் பொட்டலங்கள், மருந்துகள், அத்தியாவசிய மருந்துகள், மாத்திரைகள் யாங்கோன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்தக் விமானமும் அந்த நகரை சேர்ந்துள்ளது என மத்திய வெளியுறவு்துரை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ! நள்ளிரவில் குலுங்கிய கட்டடங்கள்...