இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை: வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயற்சி...
அமெரிக்க வெள்ளை மாளிகையை வாடகை டிரக் கொண்டு தாக்குதல் நடத்த முயன்ற இந்தியர் சாய் வர்ஷித் கண்டுலாவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
இந்த தாக்குதல் முயற்சி சம்பவம் 2023, மே 22ம் தேதி நடந்துள்ளது. அமெரிக்காவில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க அரசாங்கத்தை நீக்கிவிட்டு, நாஜி சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட அரசை நிறுவ இந்தியர் சாய் வர்ஷித் திட்டமிட்டு இந்த தாக்குதல் முயற்சியை நடத்தியுள்ளார் என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள சந்தாநகரைச் சேர்ந்தவர் சாய் வர்ஷித் கண்டுலா. அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகக் குடியேறி க்ரீன் கார்டு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் முயற்சி வழக்கில் கடந்த 2024ம் ஆண்டு மே 13ம் தேதி சாய் வர்ஷித் குற்றவாளி என நீதிபதி டாப்னே எல் பிரெட்ரிச் அறிவித்தார். இந்தத் தீர்ப்பில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்தபின்பும், 3 ஆண்டுகள் கண்டுலாவை கண்காணிப்பில் வைத்துதான் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023, மே 22ம் தேதி மிசோரியில் இருந்து விமானம் மூலம் சாய் வர்ஷித் வாஷிங்டன் டிசி நகருக்கு வந்துள்ளார். அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் டலாஸ் விமானநிலையத்துக்கு அன்று மாலை 5.20க்கு வந்துள்ளார். அங்கு ஒரு டிரக்கை வாடகைக்கு எடுத்துக்கொண்டு மாலை 6.30 மணிக்கு புறப்பட்டுள்ளார். இந்த டிரக்கில் ஏற்ற வேண்டிய உணவுப் பொருட்கள், எரிவாயு ஆகியவற்றை ஏற்றாமல் வாஷிங்டன் டிசி நகருக்கு கண்டுலா புறப்பட்டார். வாஷிங்டன் டிசி நகரை அடைந்ததும், வெள்ளை மாளிகைக்குச் செல்லும் சாலையில் இருக்கும் தடுப்புகளை உடைத்து, அதிபர் பூங்காவுக்குள் இரவு 9.35க்கு சாய்வர்ஷித் நுழைந்தார்.
இதையும் படிங்க: மோடி அரசில் 27% வீழ்ச்சி! டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு ஏன் சரிகிறது?
சாய் வர்ஷித் அதிவேகமாக டிரக்கை சாலையில் ஓட்டியதைப் பார்த்த மக்கள், பாதசாரிகள் அலறியடித்துக் கொண்டு சாலையில் ஓடினர். டிரக்கை முன்னும், பின்னுமாக ஓட்டி, அதிபர் மாளிகைக்கு செல்லாமல் தடுக்கும் தடுப்புகள் மீது டிரக்கை மோதவைத்துள்ளார் சாய் வர்ஷித். குறிப்பிட்ட அளவு டிரக் சேதமடைந்ததும், டிரக் அங்கிருந்து நகரவில்லை. டிரக்கில் இருந்து இறங்கிய சாய் வர்ஷித், ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்ட கொடியை தூக்கிப் பிடித்து நின்றார். அதன்பின் அங்கு வந்த அமெரிக்க வெள்ளைமாளிகை போலீஸார், பாதுகாப்புப்படையினர் சாய் வர்ஷித்தை கைது செய்தனர் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸார் விசாரணையில், “ வாடகை டிரக் மூலம் வெள்ளை மாளிகையை சேதப்படுத்தி, அங்கு உள்ளே நுழைந்து, ஜனநாயக ரீதியிலான அரசை நீக்கிவிட்டு, அரசியல் அதிகாரத்தை சர்வாதிகாரம் நிரம்பிய நாஜிக்களிடம் ஒப்படைக்க சாய் வர்ஷித் திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் விசாரணையில் தன்னுடைய நோக்கம் நிறைவேற அமெரிக்க அதிபரை கொல்லவும் திட்டமிட்டிருந்ததாக சாய் வர்ஷித் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த தாக்குதல் நடத்த பல வாரங்களாக, மாதங்களாக சாய் வரஷித் திட்டமிட்டுள்ளார்.
பலமுறை ஆயுதம் தாங்கிய போலீஸாரின் வாகனங்களை இயக்கி தாக்குதல்நடத்தவும் சாய் வர்ஷித் திட்டமிட்டு அது தோல்வி அடைந்துள்ளது. மிகப்பெரிய டிரக்குகளை வாடகைக்கு எடுக்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை பகுதியில் சேதம் ஏற்படுத்தியமைக்காகவும், தேசியப் பூங்கா பகுதியில் சேதம் ஏற்படுத்தியதற்கும் 4,322 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என சாய் வர்ஷித்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியை தாக்கிய பேருந்து நடத்துனர்: 10 ரூபாய் டிக்கெட் பிரச்சினையால் விபரீதம்..