இன்ஸ்டா மூலம் கஞ்சா சேல்ஸ்! கோடு வேர்டு சொன்னால் தான் பொட்டலம்..! சிக்கிய வாலிபர்கள்..!
சங்கராபுரம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடியவனை தேடி வருகின்றனர்.
தமிழக இளைஞர்கள் இடையே போதைப்பழக்கம் அதிகரிப்பதே குற்ற சம்பவங்களுக்கு காரணமாக கூறப்படுகிறது. மதுபோதையில் ஒருபக்கம் இளைஞர்கள் சீரழியும் போது, சிறார்கள் கஞ்சா போதையில் சிக்கி அழிகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் கஞ்சா எளிதில் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக போலீசாரும் ஆப்ரேஷன் கஞ்சா 1. ஆப்ரேஷன் கஞ்சா 2.0, ஆப்ரேஷன் கஞ்சா 3.0 என அடுத்தடுத்து நடத்தி பெருமளவு கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தினர். எனினும் பிற மாநிலங்களில் இருந்து ரயிலிலும், பஸ் மற்றும் கார் மூலமாகவும் தமிழகத்திற்குள் கஞ்சா கடத்தப்பட்டு வருவது தொடர்கிறது.
இந்நிலையில் பொதுவெளியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் நவீன டெக்னாலஜியை உபயோகப்படுத்தி இளைஞர்கள், சிறுவர்கள் அதிகம் உலாவும் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப் சாட் போன்ற செயலிகளின் வழியே கஞ்சா விற்பனையை துவக்கி உள்ளனர். இதில் எளிதில் போலீசில் சிக்கி விடாமல் இருக்க கோடு வைத்து பேசிக்கொள்வதும் தெரியவந்துள்ளது. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு சப்ளை கிடையாது என்றும் கறாராக சொல்லி விடுகின்றனர்.
இதையும் படிங்க: 'காதலர் தின' ஸ்பெஷல்... அடேங்கப்பா...! இவ்வளவு சாக்லேட், ரோஜா விற்பனையா!
இதனால் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை கையும் களவுமாக பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் நீடித்தது. இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் சிவன்யா தலைமையிலான போலீசார் இளையாங்கன்னி கூட்டுச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 4 இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்கு பின்னாக பதிலளித்து கொண்டிருந்த நிலையில் அதில் ஒரு இளைஞர் தப்பி ஓடினார். சந்தேகமடைந்த போலீசார் மீதமிருந்த 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் பெருங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன், பிரதாப் மற்றும் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்பதும் தெரிந்தது. தப்பியோடியது அவர்களின் நண்பன் விஷ்வா என்றும் தெரிட்ந்தது. இதனை அடுத்து அவர்களை சோதனை செய்த போலீசார், அவர்கள் பையில் மறைத்து வைத்திருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். எவ்வாறு கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில் இன்ஸ்டாகிராம் மூலம் ரகசிய பெயரைக் கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் மற்றும் பிரதீப், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய விஷ்வா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சாவை விற்பனை செய்ய திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இரண்டு இளைஞர்கள் வந்திருப்பதும், இன்ஸ்டாகிராம் மூலம் ரகசிய பெயரைக் கொண்டு விற்பனை செய்த சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேவநாதன் யாதவ் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதா? இல்லையா? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!